Politics
“பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றினால் காவிகளின் சாயமே வெளுக்கும்” - ஆசிரியர் கி.வீரமணி சாடல்!
அ.தி.மு.க ஆட்சியில் தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது என்பது தொடர்கிறது. காவிகளின் காலித்தனம் அதிகரித்த வண்ணம் உள்ளது. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மக்களே நேரிடையாகச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
“தந்தை பெரியார் என்ற சகாப்தத் தலைவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு - இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டைத் தனித்தன்மையுடன் ஒளிரச் செய்கிறது! காவிகள் கால் பதிக்க முடியவே முடியாது!
இந்தியாவில் பல மாநிலங்களிலும் கால் பதித்துவரும் காவிக் கூட்டம் - பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார்கள் தமிழ்நாட்டு மக்களால் அடியோடு புறக்கணிக்கப்படுவதற்கு இந்த மனிதர்தானே காரணம் என்ற ஆத்திரம் வெறியாகி - தந்தை பெரியார் சிலையை அவமதிக்கும் சிறுமதி வேலையில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது.
தமிழ் மண்ணுக்குத் தந்தை பெரியாரின் சித்தாந்தம்!
தந்தை பெரியார் சிலை கூட மத வெறியர்களை மருண்டோடச் செய்கிறது; காரணம், தந்தை பெரியார் பதித்துச் சென்ற சித்தாந்தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது - பெண்ணுரிமைக்கானது - சமூக நீதிக்கானது - பகுத்தறிவுக்கானது - பார்ப்பனரல்லாதரின் உரிமைக்கானது - தமிழ்நாட்டின் உரிமைக்கானது. இவை அனைத்திற்கும் விரோதமான ஆட்சி மத்தியில் நடக்கிறது.
மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.கவின் கொள்கை - அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கொள்கை - மாநில உரிமைகளை ஏற்காத ஒன்று - ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற இந்துத்துவக் கோட்பாட்டைத் தன் வேராகவும், உயிராகவும் கொண்டது.
இவற்றுக்கெல்லாம் நேர் எதிரான - பார்ப்பனீய நோயை ஆணிவேர் வரை சென்று வீழ்த்தும் சமத்துவ சமதர்ம, சுயமரியாதைத் தத்துவத்தை தமிழ் மண்ணில் ஒவ்வொரு கண்ணியிலும் விதைத்துச் சென்று இருக்கிறார் தந்தை பெரியார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒட்டுமொத்த தமிழின மக்களின் உணர்வில், குருதியில் உறைந்து போன மண்ணின் மனப்பாங்கு (Soil Psychology) இது என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.
காவிச் சாயத்தை ஊற்றினால் காவிகளின் சாயம்தான் வெளுக்கும்!
சித்தாந்தத்தைத் சித்தாந்தத்தால் சந்திக்க முடியாத - பிற்போக்குத்தனக் காவிக் கூட்டம் சிலையாக எழுந்து நிற்கும் தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்துவதும், செருப்பு மாலை அணிவிப்பதும், காவி நிறச் சாயத்தைப் பூசுவதுமான கீழ்த்தரமான இத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிச் சாயத்தை தந்தை பெரியார் சிலைமீது ஊற்றுவதால் காவியை தமிழ்நாட்டில் காலூன்றச் செய்யலாம் என்ற கனவு காணவேண்டாம். காவிச் சாயத்தை ஊற்றுவதன்மூலம், ஊற்றிய காவிக் கும்பலின் சாயம்தான் வெளுக்கும்.
இத்தகு செயல்கள் தந்தை பெரியார் கொள்கைமீது - அவர்தம் சித்தாந்தம்மீது உண்மையான திராவிட இயக்கங்கள்மீது மேலும் மேலும் உறுதியை, ஓங்கி ஒலிக்கவே செய்யும்.
சமூக வலைதளங்களில் கீழ்த்தரப் பேச்சுகள்!
சமூக வலைதளங்களில் தந்தை பெரியார்மீதும், திராவிட இயக்கத் தலைவர்கள்மீதும் கீழ்த்தரமான ஒளி-ஒலிபரப்புகள் நடந்துகொண்டுள்ளன.
ஒரு பார்ப்பன வார ஏடு, அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களையும் சேர்த்து கீழ்த்தரமாக (செருப்படி என்ற சொல்லைக்கூடப் பயன்படுத்தி) எழுதுகிறது. அப்படியும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்குக் கோபம் வரவில்லை.
தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அ.தி.மு.க ஆட்சியில் அதிகம்!
அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து தந்தை பெரியார் சிலையை அவமதிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
திருப்பத்தூர் (வேலூர்), தாராபுரம், வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி, காஞ்சிபுரம் அருகே கலியப்பேட்டை, நேற்றிரவு (16.7.2020) கோவை சுந்தராபுரம் முதலிய இடங்களில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுகிறது. கோவை சுந்தராபுரத்தில் இரவோடு இரவாக காலிகள் தந்தை பெரியார் சிலைமீது காவிச் சாயத்தை ஊற்றி இருக்கிறார்கள். (சில இடங்களில் அண்ணல் அம்பேத்கர் சிலையும் அவமதிக்கப்படுகிறது).
அண்ணா பெயரையும், ‘திராவிட’ பெயரையும் கட்சியில் வைத்துக்கொண்டு இருக்கும் அண்ணா தி.மு.க ஆட்சியில் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை.
அதிகபட்சமாகப் போனால், பெரியார் சிலையை அவமதித்த ஆசாமி ‘‘மன நோயாளி’’ என்று கூறி, காவல்துறை தனது கோப்பை தந்திரமாக முடித்துக் கொண்டு வருகிறது.
புராணங்களில் உள்ளதைச் சொன்னால் குற்றமா?
புராணங்களில் உள்ளதை உள்ளபடி வெளியிட்டால், அந்தத் தோழர்கள்மீது பல பிரிவுகளில் வழக்கு - அதே நேரத்தில் ‘யூடியூப்’ மூலமாக தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் தாறுமாறாக திட்டித் தீர்ப்பவர்களைக் கண்டுகொள்ளாத நிலை!
பார்ப்பனர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு ‘யூ டியூப்’ சேனலில், இன்னொரு பார்ப்பன நடிகரை அழைத்துப் பேட்டி காண்பதும், அந்த நடிகர் தந்தை பெரியாரைக் கூலி என்று கூறுவதும் எல்லாம் தமிழ்நாடு அரசுக்கோ, காவல்துறையின் உளவுப் பிரிவுக்கோ, சைபர் க்ரைம் பிரிவுக்கோ தெரியாதா? தந்தை பெரியார் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டால் மட்டும் போதுமா? அ.தி.மு.க.விலோ, ஆட்சியிலோ தந்தை பெரியாரை உண்மையாக மதிக்கும் ஒரே ஒருவர்கூட கிடையாதா?
பா.ஜ.க.வின் மிரட்டலுக்கோ, அதிகார அச்சுறுத்தலுக்கோ கைகட்டி சேவகம் செய்யும் ஓர் ஆட்சி மாநிலத்தில் இருப்பதால், காவிக் கூட்டம் துள்ளித் திரிகிறது.
காலிகளை மக்களே நேரிடையாகச் சந்திக்கவேண்டுமா?
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால். மக்களே நேரிடையாகச் சந்திக்கும் நிலை ஏற்படாதா? அந்த நிலையை அ.தி.மு.க. அரசு எதிர்பார்க்கிறதா? இன்னும் எத்தனை மாதத்துக்கு இந்தப் போக்கு? பார்ப்போம்! பார்ப்போம்!!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுவும் தந்தை பெரியாரை அவமதிப்பவர்களை, கட்சிகளைக் கடந்து, கடவுள், மத நம்பிக்கைகளைக் கடந்து கர்ச்சித்து எழுவார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. (1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் நினைவிருக்கட்டும்).
கழகத்தின் சட்டப்படியான அணுகுமுறை பலகீனமானது என்ற நினைப்பா அரசுக்கு?
திராவிடர் கழகத்தின் அணுகுமுறையும், செயல்பாடுகளும் சட்டத்திற்குட்பட்டே எப்பொழுதும் இருக்கும். ஒருக்கால் அ.தி.மு.க. அரசு இதனை ஒரு பலகீனமாகக் கருதுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. தமிழ்நாட்டின் தலைவர்களை அவமதித்தாலும் கண்டுகொள்ளமாட்டோம் என்று கருதும் ஆட்சியைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் - கண்டிப்பாக ஏற்கமாட்டார்கள்.
அ.தி.மு.க. அரசு விழிக்கட்டும்!
தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது சீற்றத்தை, கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் பல பகுதிகளிலும் தன்னிச்சையாகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுதான் தமிழ் மண் - புரிந்துகொள்வீர்!
காவிகளே, காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் விபரீத விளையாட்டை விளையாட வேண்டாம்! இதை உங்களுக்கு உணர்த்தக் காத்திருக்கிறது காலம்! தமிழக அரசே, செயல்படுவீர்களா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்