Politics

"முடிந்தால் மோதிப் பாருங்கள்" - உரிமை மீறல் வழக்கை எதிர் கொள்ள தயார் என அரசுக்கு தி.மு.க சவால்!

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடை செய்யப்பட்ட போதும், மிக சாதாரணமாக கடைகளில் கிடைக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக, சட்டமன்றத்தில் குட்கா பாக்கெட்டுகளை காட்டி கேள்வி எழுப்பினர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த விவகாரத்தை தற்போது உயர் நீதிமன்றத்தில் விரைவுபடுத்த வேண்டும் என அரசு தரப்பு கோரியுள்ளது.

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசு, இதை கையில் எடுத்திருக்கிறது. ஆனால், வழக்கை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதாக தி.மு.க தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது, சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் தி.மு.க மேற்கொண்ட கள ஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக அதை சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் குட்கா பொருட்களை காட்டி அரசுக் எதிராக குற்றச்சாட்டை வைத்தார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர். அதில் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சட்டசபை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் " தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்கிறார்கள். இதை நிரூபித்த தி.மு.க உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளது" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து எடுக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார்

அப்போது குறுக்கிட்ட தி.மு.க சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மற்றும் என்.ஆர் இளங்கோ, 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நிலையில் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அரசு, உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட வழக்கை விரைந்து எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்கிறார். இந்த வழக்கு விசாரணைக்கு நாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதி அன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.