Politics
“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்!
குஜராத் மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அடுத்தடுத்து ராஜினாமா செய்யச் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதில் பா.ஜ.க சார்பில் 3 பேர், காங்கிரஸ் சார்பில் இருவர் என 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ.க சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் சக்திசின்ஹா கோகில், பரத்சின்ஹா சோலங்கி இருவரும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு 103 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இரு எம்.எல்.ஏக்கள் பாரதிய பழங்குடியினக் கட்சிக்கும், சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரும் உள்ளனர்.
இரு இடங்கள் நீதிமன்ற வழக்கின் காரணமாகவும், 5 இடங்கள் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவாலும் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்த 5 எம்.எல்.ஏக்களும் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் குஜராத் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் இரு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அக்ஷய் படேல், ஜிது சவுத்ரி ஆகிய இருவரும் நேற்று சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இன்று சபாநாயகர் திரிவேதி அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 66 ஆகக் குறைந்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஜ்யசபா தேர்தலில் ஒரு வேட்பாளர் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த வழியற்ற பா.ஜ.க அரசு, மலினமான அரசியலில் ஈடுபட்டு எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யவைப்பது அரசியல் கட்சியினரையும், மக்களையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!