Politics
‘நீங்கள் தி.மு.க பயனாளி; உங்களுக்காக குரல் கொடுப்போம்’ : வி.பி துரைசாமிக்கு தி.மு.க வழக்கறிஞரின் கடிதம் !
வி.பி.துரைசாமி அவர்களுக்கு, கோவை தி.மு.க வழக்கறிஞர் ஜி.டி.இராஜேந்திரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 1989ல் தி.மு.கழக ஆட்சி அமைந்த போது அமைச்சரவை பட்டியலை தயார் செய்தபோது துணை சபாநாயகர் பொறுப்பிற்கு தலைவர் கலைஞர் அவர்கள் வி.பி.துரைசாமி பி.ஏ.,பி.எல். என்று அறிவித்தது கூட உங்களுக்குத் தெரியாது.
ஏனென்றால் கடுமையான காய்ச்சலால் உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப் பட்டிருந்தீர்கள். தலைவர் கலைஞரே உங்களையும் சமுதாயத்தையும் மனதில் கொண்டே அந்தப்பதவியை வழங்கி உங்கள் மூலம் அருந்ததியர் சமுதாயத்திற்கு ஒரு அடையாளத்தை முதன்முதலில் தந்தார்.
அப்பொழுது உங்களுக்கு வயது ஒரு 36க்குள் இருக்குமா? தமிழகசட்டப்பேரவையின் துணை சபாநாயகராக நீங்கள் சபையில் நுழைந்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளும், மாண்புமிகு அமைச்சர்களும் ஏன் தலைவர் கலைஞர் அவர்களே எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்!
எந்த...துரைசாமிக்கு....?
தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டும், காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து கையில் வைத்துக் கொண்டும், ஜாதி இந்துக்கள் எனும் குடியானவர்களைப் பார்த்து கூனிக்குறுகி "கும்பிடுறேன்ஞ் சாமி!" என்று சொன்ன ஜாதியில் பிறந்த துரைசாமியைப்பார்த்து!
இந்த ஒரு வரலாற்றுச் சாதனையை தலைவர் கலைஞர் வழங்கியதற்காக கோவை மாநகரத்தின் தெருக்களின் சுவர்களிலெல்லாம் சுவரொட்டிகள் ஒட்டி தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து ஆனந்தக் கூத்தாடியவன் நான்!
அன்று தொடங்கி இந்த மே மாதம் 18ம் தேதி காலை 10 மணி வரையிலும் கடந்த 30 ஆண்டுகாலமாக தங்களுடன் அரசியலில் பயணித்தவன். 1993ல் நீங்கள் ஜெயலலிதாவுடன் சென்று திரும்பி வந்தும் கூட உங்கள் மீது கலைஞர் கோபம் கொள்ளாமல் உங்களுக்காக கட்சியில் ஆதிதிராவிடர் நலக்குழு எனும் ஒரு அணியை உருவாக்கி அதில் தலைமைக் கழகச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், 2006ல் மீண்டும் துணை சபாநாயகர், அனைத்திற்கும் மேலாக கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் எனும் பொறுப்புகளை மாறிமாறி வழங்கி அழகுபார்த்து அருகிலேயே சரியாசனம் கொடுத்து தலைவர் கலைஞரும், பேராசிரியரும், தளபதியாரும் தங்கள் பக்கத்திலேயே அமர்த்திவைத்து மகிழ்ந்தனர்.
காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்கள், ம.தி.மு.க தலைவர்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் என அனைத்து தோழமை கட்சிகளின் கூட்டங்கள், உயர் மட்டக் குழுக்கள் மற்றும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தி.மு.கழகத்தின் சார்பாக தளபதி அவர்களால் முன்னிலைப் படுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது மட்டுமல்ல; அறிவாலயத்தின் முன் உள்ள கொடிக்கம்பத்தில் சுதந்திரதினம், குடியரசுதினம் நாட்களில் மூவண்ணக்கொடியேற்றும் பெருமைகளையும் வழங்கினார் தளபதி.
கடந்த 30 ஆண்டுகளில் நீங்கள் கோவை வரும்போதெல்லாம் அதிகாலையில் ரயிலடியிலோ, விமானநிலையத்திலோ இருந்து வரவேற்று தங்கவைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க உடனிருந்து உதவிகள் செய்து சென்னை திரும்பும் வரை இருந்து நான் உங்களுக்கு பணிவிடை செய்ததெல்லாம் சமுதாயத்திற்காகவோ எதிர்பார்ப்புகளுக்காகவோ அல்ல! நீங்கள் தலைவர் கலைஞர் அவர்களால் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டப்பட்டவர் என்பதால்.
கடந்த 18ம் தேதிக்குப்பிறகு (க)மலஆலயம் சென்றபிறகு நீங்கள் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில் தி.மு.க.வில் சாதிக்கொரு நீதி என்று குறிப்பிட்டது சரிதான். சனாதனம் சாதிகளைச்சொல்லி பிரித்தது. பிரிக்கப்பட்ட ஜாதிகளைப் பார்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு என அனைத்தையும் ஜாதி பார்த்து செய்ததால் தான் நீங்கள் இன்று அனைத்திலும் பயன்பெற்று முன்னேறி வி.பி.துரைஸ்வாமி அய்யங்காராக மாறுவதற்குக் காரணமே நீதிக்கட்சியின் நீட்சிகளான தி.க., தி.மு.க., காரணம்.
அந்தவகையில் நீங்கள் தி.மு.க.வின்பயனாளி. உங்களுக்கு இனி சாதி தேவையில்லையெனில் பூணூல் அணிந்து மதமாற்றம் மாதிரி சாதிமாற்றம் அடையமுடியுமா என்று உங்கள் முருகனிடமும், கிருபாநிதியை அடித்த சாதிவெறியன் இல.கணேசனிடம் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லுங்கள்.
ஆவாளிடம் நீங்கள் சேர்ந்த நொடியிலிருந்து ஊடகங்கள் உங்களை மட்டுமே குறிவைத்து கேள்விக்கணைகளைத் தொடுத்து உங்களுக்கு மனஉளைச்சலையும், தர்மசங்கடத்தையும், நிலைகுலையச் செய்தும் பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு செல்வதை கைக்குட்டையால் அடிக்கடி வியர்வையை துடைப்பதிலிருந்தே தெரிகிறது.
மொத்த ஊடகத்தையும் கையில் வைத்து ஆட்டிப்படைக்கும் காவிகள் இந்தத் தருணத்தில் உங்களை சீண்டி பைத்தியகாரனாக்குவதை பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் எங்களால் அந்த இழிநிலையை காணச்சகிக்கவில்லை. நீங்களும் கிருபாநிதி போல், பங்காரு லட்சுமணனைப் போல், மாற்றப்பட்டு விடுவீர்களோ என்றே கருதுகிறோம்.
அப்போதும் நீங்கள் பிறந்த சமுதாயத்தின் காரணமாக எம் போன்ற கலைஞரின் உடன்பிறப்புகள் தான் உங்களுக்காக சமூகநீதிக்குரல் கொடுப்போம்.
பேரறிஞர் அண்ணாவின் மொழியில் சொல்வதென்றால்..
எங்கிருந்தாலும் வாழ்க எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!