Politics

இலவச அரிசி வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு: நிர்க்கதியான புதுவை அரசு... கண் கலங்கிய முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில் உள்ள ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்கவேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை செல்லாது என அறிவிக்கக் கோரி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசிக்கு பதிலாக பணம் வழங்கும்படி குடியரசுத் தலைவர் அறிவுறுத்தலின்படி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு புதுச்சேரி அமைச்சரவை கட்டுப்பட வேண்டும் என உத்தரவிட்டு முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இது புதுச்சேரி மாநில மக்களிடையே பரபரப்பானது.

இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இலவச அரிசி விவகாரம் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கண்கலங்கிப் பேசியுள்ளார். அப்போது, “இன்று ‘கறுப்பு நாள்’. புதுச்சேரி நலனுக்காக மத்திய அரசுதான் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை என்றாலும் நீதிமன்றமாவது நமக்கு கைகொடுக்கும் என எதிர்பார்த்தது வீண்போயுள்ளது. இந்த ஆட்சி இருப்பதும் ஒன்றுதான். இல்லாததும் ஒன்றுதான்.

மக்கள் நலனுக்காகவும் எதுவும் செய்யமுடியவில்லை. கட்சிக்கும் எதுவும் செய்யமுடியவில்லை.” என அதிருப்தியோடு தழுதழுத்த குரலில் நாராயணசாமி பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “மாநில அரசுக்கு எதிராக ஏற்கெனவே மத்திய அரசும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது உயர்நீதிமன்றமும் இலவச அரிசி வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது. இது எனக்கு துக்ககரமான நாள்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.கவின் நிழலாகவே செயல்படுகிறார் ரஜினி” - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாடல்!