Politics
ரூ.168 கோடிக்கு சசிகலா பினாமி சொத்து வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது.. ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்!
பணமதிப்பிழப்பு அறிவித்த போது, ஜெயலலிதாவின் தோழி சசிகலா 168 கோடி ரூபாய்க்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ல் நவம்பர் 8-ஆம் தேதி மோடி அரசு பணமதிப்பிழப்பை அறிவித்த போது செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா சொத்துகள் வாங்கியதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து வருமான வரித்துறை சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள், உறவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தியது.
சோதனையில் சசிகலா 1,674 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கியிருப்பது தெரியவந்தது. சசிகலா வாங்கிய சொத்துகளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓசியன் ஸ்பிரே கடற்கரை ரிசார்ட் ஓட்டலும் ஒன்று.
இந்த ஹோட்டல் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல நகைக்கடையான லட்சுமி ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹோட்டலை வாங்க ரூ.148 கோடிக்கு செல்லாத நோட்டுகளை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, ஹோட்டலையும் பினாமி சொத்துகள் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்ய வருமான வரித்துறை ஓசியன் ஸ்பிரே ஓட்டல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து அதன் இயக்குனர் நவீன் பாலாஜி மற்றும் பங்குதாரர்கள் 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நடந்து வந்தது. பினாமி சொத்து என்ற அடிப்படையில் நடந்த பரிமாற்றம் என்பது உறுதியாகி உள்ளதாக, வழக்கு விசாரணையின் போது வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஹோட்டலை கைப்பற்றுவதற்கு பினாமி சொத்து சட்ட விதிகளின்படி உரிமை உள்ளது என்றும், எனவே ஹோட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இது தொடர்பாக ஹோட்டல் நிறுவனம் மார்ச் 13-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!