Politics

“பித்தம் தலைக்கேறிய நிலையில் பேசிவருகிறார் ராஜேந்திர பாலாஜி” - ஆளுநர் செயலாளரிடம் தி.மு.க புகார் மனு!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடமும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டி.ஜி.பி-யிடமும் தி.மு.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்த ஆளும் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசுவதுடன், மக்களை மதரீதியாக துண்டாடும் வகையில் பேசிய அவரை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்று தமிழக ஆளுநருக்கு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தை, ஆளுநரின் செயலாளரிடமும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திலும் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம், எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று நேரில் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன், மா. சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது, “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சமீபகாலமாக பித்தம் தலைக்கேறிய நிலையில், ஒரு அமைச்சர் உறுத மொழி ஏற்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மாறாக சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் வகையில் பேசி இருக்கிறார்.

ஒரு பேட்டியிலே நானே துப்பாக்கியால் சுடுவேன் என்று பேசுகிறார். அடிக்கு அடி என்பது உதைக்கு உதை என்பது, அமைச்சராக இருந்து கொண்டு செய்கிற செயல் அல்ல.

இவர் தான் எங்களுக்கு எல்லாம் மோடி டாடி என்றெல்லாம் பேசினார். இப்போது அதை மெய்ப்பிக்கிற வகையில் அந்த மதவெறியை கையில் எடுத்துக்கொண்டு பிளவு உண்டாக்குகிற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் கையிலே கட்டியிருக்கும் கயிறுகளை பார்க்கும்போது அவர் மந்திரவாதியாக இருப்பாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. எனவே இவர் அமைச்சராக நீடிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆளுநர் செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சின் வீடியோக்களையும் ஆதாரங்களாக அளித்துள்ளோம். ஆளுநரின் செயலாளரும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளனர்.