Politics

TNPSC முறைகேடு : “தேர்வுகளை ரத்து செய்து CBI விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” - வைகோ வலியுறுத்தல்!

சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என போற்றப்படும் இந்தியாவில் ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கக்கூடிய காட்சியைத்தான் பார்க்க முடிகிறது. கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனத்தில் ஆண்டுவிழாவில் ஆளும் கட்சியை கேலி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தியதற்கு அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

இதைப் பார்க்கும்போது நாடு பாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரிகிறது. இந்தப் போக்கு நீடித்தால் எதிர்காலத்தில் கடும் விபரீதங்கள் ஏற்படும். அந்தக் கல்வி நிறுவனம் மீது போடப்பட்ட வழக்கை கர்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் அரசுத்துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தன. ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட இடத்திலேயே அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. அதில் ஊழல் நடக்காது என நேற்று வரை எல்லோரும் நம்பி இருந்தோம்.

ஆனால், அதில் இவ்வளவு பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் குரூப்-1 தேர்விலும் முறைகேடுகள் நடந்து இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே முறைகேடு நடந்துள்ள தேர்வுகளை ரத்து செய்து, சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் அது அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைப்பது மிகவும் தவறானது. இத்திட்டத்தை கல்வித்துறை அமைச்சர் திரும்பப்பெற வேண்டும். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வேண்டாம் என்னும் முடிவுக்கு அவர் வரவேண்டும். இது குழந்தைகளின் மனநிலையையும், கல்வியையும் பாதிக்கும் என்பதை அமைச்சர் உணர வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: TNPSC முறைகேடு : தொடர்ந்து சிக்கி வரும் அதிகாரிகள்; இடைத்தரகர்கள் - குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா?