Politics

“அ.தி.மு.க-வை மிரட்டி பணியச் செய்ததா பா.ஜ.க?” - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அ.தி.மு.க எம்.பி!

இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுவதில் முக்கியப் பங்கு வகித்தது அ.தி.மு.க. இலங்கைத் தமிழர் நலன் பற்றி துளியும் அக்கறையின்றி அ.தி.மு.க எம்.பிக்கள் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குடியுரிமை மசோதாவுக்கு ஏன் வாக்களித்தோம் என்பது குறித்து அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததற்கு நிர்ப்பந்தம்தான் காரணம். பா.ஜ.க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும், குறிப்பாக, மாநிலங்களில் ஆளும் கட்சிகளை இந்தச் சட்டத்தை ஆதரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.

பா.ஜ.க எப்போதுமே நேரடியாக நம்மை நிர்ப்பந்தம் செய்யாது. இந்த மசோதா தொடர்பாக அ.தி.மு.க அலுவலகத்தில் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு துணை செயலாளர் எனக்கு போனில் தொடர்புகொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துதான் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்தியாவை இந்து நாடாக மாற்றவேண்டும் என்பதுதான் பா.ஜ.கவினரின் நோக்கம். அதை நேரடியாக செய்யாமல் பல்வேறு விதங்களில் செய்து வருகிறார்கள். அப்படி செய்வதன் மூலம் இந்துக்களின் வாக்குகள் மொத்தமும் தங்களுக்கு கிடைக்கும் என்று கருதுகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதற்கான முயற்சியைச் செய்து வருகிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் அடிமையாக எடப்பாடி பழனிசாமி அரசும், அ.தி.மு.கவும் செயல்பட்டு வருவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இப்போது அதை மசோதாவுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க எம்.பி-யே ஒப்புக்கொண்டிருப்பது சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இப்படிச் சொல்வது தலைகுனிவு இல்லையா?” - அ.தி.மு.க எம்.பி.,க்களுக்கு ப.சிதம்பரம் கேள்வி!