Rahul Gandhi
Politics

“மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி” - மோடிக்கு எதிராக முழங்கிய ராகுல்!

தேசத்தைக் காப்போம் என்கிற முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பாலியல் வன்கொடுமை குறித்து நான் விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என பா.ஜ.கவினர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர். மன்னிப்பு கேட்பதற்கு நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. உண்மை பேசியதற்காக ஒருக்காலும் மன்னிப்புக் கேட்கமாட்டேன்.

காங்கிரஸ் கட்சியினர் யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடியும், அவரது உதவியாளர் அமித்ஷாவும் தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

பிரதமர் மோடி தனியாளாக நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டார். பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார். கறுப்புப் பணத்தை அழிப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறினார். ஆனால், இன்று வரை இந்தியப் பொருளாதாரம் அதிலிருந்து மீண்டெழவில்லை.

நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி தற்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. பழைய முறைப்படி கணக்கிட்டால், ஜி.டி.பி வளர்ச்சி வீதம் 2.5 சதவிகிதத்திற்கும் குறைவாக தான் இருக்கும். பிரதமர் மோடி மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து அவர்களை ஏழையாக்கி விட்டார். அதேவேளையில், அதானிக்கு 1 லட்சம் கோடி மதிப்புள்ள 100 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டு மக்களுக்கு இன்றைய நிலை தெரியும். ஜம்மு காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மத ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்த பா.ஜ.க-வினர் முயல்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று பாருங்கள். அந்தப் பகுதிகளை மோடி எப்படி பற்றி எரிய வைத்துள்ளார் என்பது புரியும்.

பிரதமர் மக்களிடம் பேசுவதில்லை, டி.வியில் தான் பேசுகிறார். மோடியின் டி.வி விளம்பரங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? எதிரிகள் நம் பொருளாதாரத்தை அழிக்கவில்லை, பிரதமர் மோடி தான் அதனைச் செய்துள்ளார்’’ எனத் தெரிவித்தார்.

Also Read: ”Make in India அல்ல; Rape in India” : கருத்துக்கு மன்னிப்புக் கோரமுடியாது” - ராகுல் திட்டவட்டம்!