Politics

‘’எனக்கு எப்படி வெங்காய விலை தெரியும்’’ : தொடரும் பா.ஜ.க அமைச்சர்களின் ஆணவப் பேச்சு!

இந்தியா முழுவதும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வெங்காயத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பெய்த கனமழையால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. அதனால் வெங்காய விலை உயர்வு என்னைப் பாதிக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மற்றுமொரு பா.ஜக அமைச்சர் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனக்கு எப்படி அதன் விலை பற்றி தெரியும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”நாங்கள் வெங்காயம் சாப்பிடமாட்டோம்.. அதன் விலை பற்றி கவலையும் இல்லை” - நிர்மலா சீதாராமன் அலட்சிய பதில்

வெங்காய விலை உயர்வு குறித்து எழுப்பப்பட்டக் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, '’நான் சைவ உணவு சாப்பிடுபவன். வெங்காயத்தை நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. என்னைப் போன்றவர்களுக்கு வெங்காயத்தின் விலைப் பற்றி எப்படி தெரியும்’’ எனக் கூறியுள்ளார்.

வெங்காய விலை உயர்வு சாமானிய மக்களை தொடர்ந்து வாட்டி வரும் நிலையில் பா.ஜ.க அமைச்சர்கள் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் பேசி வருவது தொடர்கதையாக உள்ளது.