Politics
’எங்களுடன் சேர்ந்தால், மகளுக்கு அமைச்சர் பதவி நிச்சயம்’ : சரத் பவாரிடம் நேரடியாக பேரம் பேசிய மோடி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து மகாராஷ்டிராவில் சிவேசனா, காங்கிரஸ், என்.சி.பி கட்சிகள் கூட்டணி சேர்ந்து ’மகா விகாஸ் அகாதி’ என்கிற பெயரில் ஆட்சி அமைத்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.
முன்னதாகத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை பெறுவதில் பா.ஜ.க மற்றும் சிவசேனாவிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பா.ஜ.க தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து ஆட்சியமைப்பதில் மிகப்பெரிய இழுபறி ஏற்பட்டு, தேசிய அளவில் விவாதம் எழுந்தது.
இந்நிலையில், பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்தால் தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தற்போது தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குச் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், '' பிரதமர் மோடி ஒன்றாக இணைந்து செயல்பட எனக்கு அழைப்பு விடுத்தார்.
நமது தனிப்பட்ட முறையிலான உறவு நன்றாக உள்ளது. அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன். ஆனால், அரசியலில் நம் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவது எனக்கு சரிப்பட்டு வராது எனத் தெரிவித்தேன்.
என்னை நாட்டின் ஜனாதிபதி ஆக்குவதாக கூறப்படும் செய்தி உண்மை இல்லை. இருப்பினும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் எனது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவதாக மோடி தெரிவித்தார் '' எனக் கூறினார்.
மேலும், அஜித்பவார் பட்னாவிஸுடன் இணைந்ததுக் குறித்து எழுப்ப பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேவேந்திர பட்னாவிஸுக்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்ததாக எனக்குச் செய்தி கிடைத்தவுடன் முதல் நபராக நான் உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அஜித் பவாருக்கு எனது ஆதரவு இல்லை எனத் தெரிந்ததும் அவருடன் இருந்த 10 எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் திரும்பி வந்துவிட்டார்கள்.
அஜித் பவார் எடுத்த முடிவு என் குடும்பத்தார் யாருக்கும் பிடிக்கவில்லை. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதது, தவறானது எனத் தெரிவித்தார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் அஜித்பவார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என பா.ஜ.க.,வினர் விமர்சித்து வந்த நிலையில் பிரதமர் மோடி தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது மகாராஷ்டிரா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?