Politics

மகாராஷ்டிராவைப் போன்று கோவாவிலும் விரைவில் அதிசயம் நிகழும் - சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று பதவியேற்றுக் கொண்டார். அசுர பலத்தில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு மஹாராஷ்டிராவில் தற்போது பெருத்த அடி விழுந்திருக்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவைப் போன்று விரைவில் கோவாவிலும் ஆட்சி பறிபோகும் அதிசயம் நிகழலாம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் உள்ள கோவா பார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் இன்று காலை சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்தை மும்பையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சர்தேசாய், மகாராஷ்டிராவில் நடந்த மாற்றம் நாடு முழுவதும் நடக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. மகாராஷ்டிராவில் நடந்தது போன்று கோவாவிலும் நிகழ்த்த முயல்வோம்'' எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவா பார்வர்டு கட்சி்யின் தலைவர் விஜய் சர்தேசாய் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்கள் இன்று என்னைச் சந்தித்துப் பேசினார்கள்.

அவர்கள் தவிர கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ என மொத்தம் 4 எம்.எல்.ஏக்கள் சிவசேனாவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மேலும், கோவா அரசுக்கு ஆதரவு அளித்துவரும் எம்.எல்.ஏக்கள் சிலரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

கோவாவில் அமைந்துள்ள ஆட்சியே அறத்துக்கு மாறான ஆட்சி. அங்கு, பல கட்சிகளுடன் இணைந்து தனியாக ஒரு கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதில் காங்கிரஸ் கட்சியையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம். விரைவில் மகாராஷ்டிராவைப் போன்று கோவாவிலும் அதிசயம் நிகழும்" எனத் தெரிவித்தார்.

கோவாவில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு 13 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதிக தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரசை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காமல் கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தார்.

இதனையடுத்து, மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அவரும் சில ஆண்டுகளில் உடல்நலக் குறைவால் காலமானார். தற்போது, கோவா முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமோத் சவாந்த் உள்ளார்.

கடந்த ஜூலை மாதம்,காங்கிரஸ் கட்சியில் இருந்த 10 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க.வில் கடந்த ஜூலை மாதம் இணைந்தனர். இதனால் பா.ஜ.க.வின் பலம் அதிகரித்தது. இதனையடுத்து, கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்சி தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதனால் பா.ஜ.க மீதும் அதிருப்தியடைந்த கோவா பார்வர்டு கட்சி தற்போது பா.ஜ.க ஆட்சியை கலைக்க திட்டிமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.