Politics
‘ஒரே இரவில் கூட்டணி மாறியது எப்படி?’ - பா.ஜ.க., அரசில் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றது ஏன்?
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று இரவு தெரிவித்திருந்தார். ஆனால் 8 மணி நேரத்திற்குள்ளாகவே, அதாவது பொழுது விடிந்ததும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின் பட்னாவிஸ் கூறும்போது, ‘மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான தீர்ப்பினை வழங்கியிருந்தனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு சிவசேனா பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தது. அதன் விளைவாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவுக்கு நிலையான அரசு தேவை, கிச்சடி அரசு தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.
அஜித் பவார் கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் இன்று வரை எந்தவொரு கட்சியாலும் அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. நிலையான அரசு அமைந்தால்தான், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எனவே நாங்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்து, பாஜகவுடன் இணைந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பா.ஜ.க.,வுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இல்லையென்றும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தது அஜித்பவாரின் சொந்த விருப்பம் என்றும் சரத்பவார் திடுக் தகவலை கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் ஆனது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மகராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டில் நடந்த முறைகேடு காரணமாக அரசின் கருவூலத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் மும்பை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித்பவார் மற்றும் 70 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அடங்குவர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அமலாக்கத்துறையினர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்பவார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் இருந்து மீளுவதற்காகவே பா.ஜ.க.,வுடன் அஜித்பவார் கூட்டணி அமைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் அடுத்த சில மணிநேரங்களிலேயே பல்வேறு மாற்றங்கள் மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!