Politics

‘டயர் நக்கி’ சொல்லாடலை வைத்து பா.ம.க.,வினரை கிண்டலடித்த அ.தி.மு.க பிரமுகர்!

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி அமைவதற்கு முன்பு வரை, டாக்டர். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மத்திய பா.ஜ.க அரசையும், மாநில அ.தி.மு.க அரசையும் இடைவிடாமல் விளாசி வந்தனர்.

எட்டு வழிச் சாலையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியபோது, போராட்டம் தடை செய்யப்பட்டதால், கடும் கோபத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், 'டயர் நக்கி' என கடுமையாக விமர்சனம் செய்தார் அன்புமணி ராமதாஸ்.

அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து 7 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் பெற்ற பிறகு, பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனார்கள் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும். யாரை ‘டயர் நக்கி’ எனச் சொன்னார்களோ அவர்களோடு ஒரே வேனில் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க ஆதரவாளராகப் பங்கேற்ற அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் டாக்டர்.சமரசம், “டயர் நக்கி எனச் சொன்னவர்களை டயர் பின்னால் ஓட வைத்தவர் எடப்பாடி பழனிசாமி” எனப் பேசியுள்ளார்.

நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் மேயர் சீட் கேட்டு வருகின்றன. மேயர் தேர்வு மறைமுக தேர்தலாக நடத்தப்படும் என அறிவித்திருப்பதன் மூலம், கூட்டணிக் கட்சிகளுக்கு ‘கல்தா’ கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தோல்வி பயம் ஒருபுறமிருக்க, கூட்டணிக் கட்சிகளை ‘ஆஃப்’ செய்யவே எடப்பாடி பழனிசாமி இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், தொலைக்காட்சி விவாதத்தில் அ.தி.மு.க பிரமுகர் பா.ம.க தலைவர்களை சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.