Politics

"கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தி, கொள்கை அமைப்பதில் கோட்டை விட்ட அ.தி.மு.க அரசு": சட்ட பஞ்சாயத்து இயக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட தலைவர் பதவிகளை மறைமுகமாக நடத்தலாம் என அரசு திட்ட்மிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் பேட்டி அளித்தார்.

அவர் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்த அ.தி.மு.க அரசு வேறு வழியின்றி நீதிமன்ற உத்தரவின் பெயரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இருக்கிறது. கொள்ளை அடிப்பதில் கவனம் செலுத்தியதால் கொள்கை அமைப்பதில் தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக 3 முறை உள்ளாட்சி தேர்தல் முறை மாற்றப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த முயற்சிக்கிறார்கள். நேரடி தேர்தல் முறை தான் சரியாக இருக்கும். கூட்டணி பங்கீட்டை தவிர்க்கவும், உட்கட்சி பங்கீட்டை தவிர்க்கவுமே இந்த அரசு மறைமுக தேர்வை கொண்டு வர இருக்கிறது.

மேலும் பேசிய அவர், “மக்களைச் சந்திக்கும்போது ஓட்டு கிடைக்காது என்பதால் உயர்த்திய சொத்து வரியை நிறுத்தி வைத்துள்ளனர். சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்பது போன்ற சலுகைகளை அளித்து மக்களிடம் ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என அ.தி.மு.க அரசு நினைக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.

Also Read: 'உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததற்கு எடப்பாடியின் தோல்வி பயமே காரணம்’ - மு.க ஸ்டாலின் தாக்கு !