Politics

”ஜனநாயகம் தனது புதல்வரை இழந்துவிட்டது” குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் நீண்ட கால பொதுச் செயலாளருமான குருதாஸ் தாஸ் குப்தா காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குருதாஸ் தாஸ் குப்தா மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கம்யூனிச சித்தாந்தவாதியும், பாராளுமன்ற ஜனநாயகவாதியுமான குருதாஸ் தாஸ்குப்தா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 83-வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர் பருவத்திலேயே கம்யூனிச இயக்கத்தின் கோட்பாட்டினை தனது தோள்மீது சுமந்து பரப்பும் மிகச்சிறந்த இலட்சியவாதியான குருதாஸ் தாஸ்குப்தா அவர்கள், மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராக, இருமுறை மக்களவை உறுப்பினராக பணியாற்றி, தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் துணிச்சலாக தொய்வின்றி உரிமைக் குரல் எழுப்பியவர்.

இரு அவைகளிலும் இருந்தபோது நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குழுக்களில் இடம்பெற்று ஆக்கபூர்வமான பாராளுமன்ற பணியாற்றி ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்று அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

அடக்குமுறை சட்டங்களில் கைது செய்யப்பட்டாலும் தனது ஆர்ப்பரிக்கும் எழுச்சி முழக்கத்தை பாராளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அச்சமின்றி எழுப்பிய அவர் பழகுவதற்கு இனிமையானவர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த அவர்- தலைவர் அவர்களுடன் நெருக்கமாகவும், நட்புடனும் பழகியவர்.

அவரின் மறைவால், ஜனநாயகம் தனது புதல்வர்களில் ஒருவரை இன்று இழந்து விட்டது. குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் - கம்யூனிச சித்தாந்தத்திற்கும் - தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், அவர் இறுதி மூச்சு வரை போராடிய தொழிலாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.