Politics
’வாய் வீரம் மட்டும் போதாது.. இடி அமீன் கனவுகள் இனியும் வேண்டாம்’ - நாம் தமிழர் சீமானுக்கு சுப.வீ பதிலடி !
ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்கு வங்கியை இழந்து வரும் நாம் தமிழர் கட்சியினரின் பேச்சுக்குத் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், பதிவொன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
” கைபேசிகள் எல்லாம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்களின் பொதுமேடைகளில், தலைவர்களை எதிர்பார்த்து மணிக்கணக்காய்க் காத்திருக்கும் மக்களிடம், "வந்துகொண்டே இருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார், இதோ வந்துவிட்டார்" என்று அறிவிப்பார்கள்.
அப்படித்தான் இப்போது,"வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்து கொண்டே இருக்கிறார், இதோ வளர்ந்துவிட்டார்" என்று ஒருவரைப் பற்றிய முற்றிலும் செயற்கையான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த ஒருவர் - சீமான் !
கனவுகளும் கற்பனைகளும் கூடாதவை என்று சொல்ல முடியாது. ஆனாலும், ஓர் அரசியல் பயணத்திற்கு அவை மட்டுமே போதுமானவை அல்ல. நாம் தமிழர் கட்சிக்கு இப்போது ஒரு புதிய 'தத்துவாசிரியர்' கிடைத்திருக்கிறார். பழைய 'தோழர்' அவர். 'மணி'யாகப் பேசக்கூடியவர்.
ஐம்பது விழுக்காடு இளைஞர்கள் இப்போது சீமான் பின்னால் வந்துவிட்டனர் என்று கொஞ்சமும் கூச்சப்படாமல் கூறுகின்றார். "வாங்கியுள்ள 4 விழுக்காடு வாக்குகள் போதுமானவை என்று கூற முடியாது. என்றாலும், அவருடைய வாக்கு சதவீத வளர்ச்சி வளர்முகமாக உள்ளது" என்று பூரித்துப் போகின்றார் அவர் தேர்தலே கூடாது என்கின்றவர். தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து விடுத்துக் களைத்துப் போனவர்!.
வேலூர் இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் போட்டியிடாததால், அவர்களின் வாக்குகளும் சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று, அத்தேர்தல் நடப்பதற்கு முன்பு, தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில், "கோலாகலமாக"ச் சொல்லி மகிழ்ந்தார் ஒரு 'நடுநிலைப்' பத்திரிகையாளர். தான் முதலமைச்சரானதும் என்னென்ன செய்வேன் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும், நண்பர் சீமான் சொல்லத் தவறுவதே இல்லை.
ஆனால் எதார்த்தத்தில் என்ன நடந்தது என்றால், நாங்குநேரி இடைத்தேர்தலில், ஹரி(நாடார்) என்னும் ஒரு மனிதர் இவர்கள் அனைவரின் கனவுகளையும் நொறுக்கிப்போட்டு விட்டார்.
பல லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டி, மேடைகள் போட்டு, சுவரொட்டிகள் ஒட்டி, கேட்பவர்களின் காதுகளில் ரத்தம் வடிகிற மாதிரிச் சத்தம் போட்டுப் பேசி, எதிர்காலத் திட்டங்களை எல்லாம் அறிவித்து - இவ்வளவு அலப்பறைகளையும் இவர்கள் செய்து கொண்டிருக்க, சத்தமே போடாமல் தொகுதிக்கு வந்து, இவர்களை விடக் கூடுதலான வாக்குகளை அவர் வாங்கிவிட்டார்.
சரி; போகட்டும், உண்மையிலேயே நாம் தமிழர் கட்சிக்கான வாக்குகள் கூடிக் கொண்டே போகின்றனவா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்தானே! அவை கூடிக்கொண்டே போகவில்லை. கூடிக் குறைந்துள்ளது என்பதே உண்மை. இந்த உண்மையைப் பல்வேறு தேர்தல் முடிவுகள் தரும் புள்ளி விவரங்களைக் கொண்டே நாம் பார்க்கலாம்.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் நுழைவு காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி அதிமுகவை ஆதரித்தும் தொடங்கியது. அப்போது அவர்கள் நேரடியாகப் போட்டியிடவில்லை. பிறகு மும்பை சென்று, புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனை ஆதரிக்கிறோம் என்ற சாக்கில், பா.ஜ.க வேட்பாளரான அவரையும், மோடியையும் ஆதரித்துப் பேசித் தொடர்ந்தது.
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் 231 தொகுதிகளில் போட்டியிட்டனர். (மொத்தம் 234 தொகுதிகள் என்றாலும், தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தல் நடைபெறவில்லை.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர்களின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனவே 231 தொகுதிகள்) அந்தப் பொதுத்தேர்தலில் அவர்கள் வாங்கிய மொத்த வாக்குகள் 4,58,007. அதாவது 1.06%. 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 3860 வாக்குகள் பெற்றனர். மொத்த வாக்குகளில் அது 2.18%
2019 நாடாளுமன்றத் தேர்தலில், 37 தொகுதிகளில் போட்டியிட்டு அவர்கள் பெற்ற வாக்குகள் 16,45,185. வளர்ச்சிதான், 3.88% வாக்குகளைப் பெற்றுவிட்டனர். அவ்வளவுதான், தலைகால் புரியவில்லை. நாங்கள்தான் அடுத்த ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்றார்கள். ஆனால் அதற்குப் பின் தளர்ச்சி தொடங்கிவிட்டது.
வேலூர் இடைத்தேர்தலில், தினகரன், கமல் ஆகியோரின் கட்சிகள் போட்டியிடாத சூழலிலும், அவர்கள் வாக்குகளையும் சேர்த்து இவர்கள் பெறவில்லை. மாறாக, இருந்த வாக்குகளையும் இழந்தனர். அதில் அவர்கள் பெற்ற வாக்குகள் 2.6 % மட்டுமே.
இப்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அந்த வாக்கு சதவீதம் மேலும் சரிந்துள்ளது. இரண்டு தொகுதிகளிலுமாகச் சேர்த்து, 1.85% விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். தேர்தல்களில் வெற்றி தோல்விகள் இயல்பானவை. வாக்குகள் கூடும், குறையும். எதுவும் நிரந்தரமில்லை.
அடுத்த தேர்தலிலேயே வாக்குகள் கூடலாம். தேர்தலில் பெறும் வாக்குகளை வைத்துமட்டும் ஒரு கட்சியை மதிப்பிட முடியாது. ஆனால் கட்டுத்தொகையைக் கூடப் பெறாத சூழலில், எந்தக் கட்சியும் இவ்வளவு கூச்சல் போட்டதில்லை. (கட்டுத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கு 6 % வாக்குகள் பெற வேண்டும்).
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தன, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 15 வாக்குகள் பெற்றிருந்தால் கூட, 7500 வாக்குகள் கிடைத்திருக்கும். ஆனால், இவர்களோ 7000 வாக்குகளுக்கும் குறைவாகவே இரண்டு தொகுதிகளிலும் சேர்த்துப் பெற்றுள்ளனர். அதாவது, ஒரு வாக்குச்சாவடிக்கு15 வாக்குகள் வீதம் கூட வாக்குகளைப் பெற இயலாத நிலையில்தான் அக்கட்சி உள்ளது என்பது புரிகிறது.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுவது, அவர்களைக் குறைத்துப் பேசுவதற்காக அன்று. வளர்வதற்கு முன்பே இவ்வளவு ஆணவம் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்குத்தான். மற்றவர்களுக்கெல்லாம் எங்கள் மீது பொறாமை என்கின்றனர். ஒரு வாக்குச்சாவடியில் 15 வாக்குகளைக் கூடப் பெற இயலாதவர்கள் மீது யாரேனும் பொறாமை கொள்வார்களா?
மேடையில் பேசும்போது அனைவரையும் தரக்குறைவாக பேசுவது, வாடா, போடா என்று ஒருமையில் பேசுவது இவற்றை எல்லாம் குறைத்துக் கொள்வது அக்கட்சிக்கு நல்லது என்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான், இவ்வளவும் எழுத வேண்டியுள்ளது. 'நாங்கள்தான் கொன்று புதைத்தோம்' என்று சீமான் அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசினார். உண்மைதான், தமிழகத்தின் மேடை நாகரிகத்தை அவர்தான் கொன்று புதைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆட்சிக்கு வந்துவிட்டது போலவும், முதலமைச்சர் ஆகி விட்டது போலவும் கருதிக்கொண்டு அவர் பேசிய கூட்டங்கள் எத்தனை! எதிர்க்கருத்து உள்ளவர்களைப் பச்சைப் பனைநாரால் சத்தமின்றி அடித்துச் சதையைப் பிய்த்துவிடும் இடி அமீன் கனவுகள்தான் எத்தனை!
நண்பர் சீமானுக்கு அன்புடன் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டியுள்ளது. திராவிட இயக்கத்தை அழிப்பது, முதல்வராகி ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் இருக்கட்டும். முதலில், ஒரு தொகுதியிலாவது கட்டுத்தொகையை (ஜாமீன்) வாங்கிவிட முடியுமா என்று பாருங்கள் !” என்று பதிவிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!