Politics
“தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை திசைதிருப்பவே இதைப்பற்றிப் பேசுகிறார்கள்” : வைகோ கண்டனம்!
முரசொலி அலுவலகம் இடம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து திசைதிருப்பும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
“பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நான் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார்.
அப்போதைய சூழ்நிலையில் நான் அதுபோன்று கருத்து தெரிவித்து இருக்கலாம். ஆனால் அக்கருத்து தவறானது என்பதை பின்னர் உணர்ந்தேன். தற்போது இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டு இருப்பதால் தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சகோதரர் மு.க.ஸ்டாலின் மிகத்தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். முரசொலி அலுவலக இடம் பற்றிய அரசுப் பதிவு ஆவணங்களை வெளியிட்டது மட்டுமன்றி, அது பஞ்சமி நிலம் தான் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் முரசொலி இடம் குறித்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்னைகளை திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவந்து, காவிரி தீரத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சி, தென் மாவட்டங்களுக்கு பேரபாயமாக கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமித்து வைக்கும் திட்டம், தேனி மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நியூட்ரினோ ஆய்வகம், மக்கள் எதிர்ப்புகளை மீறி சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டி காவிரி நீரை தடுக்க முயற்சி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாநில உரிமைகளைப் பறித்து சமூகநீதிக்கு புதைகுழி தோண்டும் திட்டம், இதுபோன்ற மத்திய பா.ஜ.க அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக தி.மு.க. மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள்.
பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணையாக இருப்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டும் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!