Politics
நலிந்த பிரிவினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: பாஜக-அதிமுக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் - திருமாவளவன்
என்.சி.ஆர்.பி அறிக்கை பா.ஜ.க - அ.தி.மு.க ஆட்சியில் தலித்துகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதியோர், பெண்கள், தலித்துகள் முதலான நலிந்த பிரிவினருக்கு எதிரான வன்முறை இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளதை மத்திய அரசின் அமைப்பான தேசிய குற்ற ஆவண மையத்தின் ( NCRB) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும், தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசும் பொறுப்பேற்று விளக்கமளிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படவேண்டிய இந்த அறிக்கையை 2015ம் ஆண்டுக்குப் பிறகு பா.ஜ.க அரசு வெளியிடாமல் வைத்திருந்தது. என்.சி.ஆர்.பி அறிக்கை வெளியிடப்படாததைச் சுட்டிக்காட்டி வி.சி.க சார்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. விரைவில் வெளியிடப்படும் என உள்துறை அமைச்சகம் பதிலளித்தது. அதைத் தொடர்ந்தே இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் 2015ம் ஆண்டுக்கும் 2017ம் ஆண்டுக்கும் இடையில் முப்பதாயிரம் அதிகரித்துள்ளன. அதே காலக்கட்டத்தில் குழந்தைகள் மீதான வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாயிரம் அதிகரித்துள்ளது. அதுபோலவே தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து 2017ல் மட்டும் நாடு முழுவதும் 45,609 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
தலித் மக்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள வன்கொடுமைகள் பற்றிய புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 2017ம் ஆண்டு தலித் மக்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் 170 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 246 தலித்துகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.சி பிரிவு 147 முதல் 151 இன் கீழ் பதிவான வழக்குகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தலித் மக்களுக்கு எதிரான கலவரங்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. உத்தர பிரதேசத்தில் 452 சம்பவங்களில் 496 தலித்துகள் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதற்கடுத்து மகாராஷ்டிராவில் 197 கலவரங்களில் 258 தலித்துகள் பாதிக்கப்பட்டுள்ளனர்; மூன்றாவதாகத் தமிழ்நாட்டில்தான் 170 கலவர சம்பவங்களில் 246 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அதுபோல தலித் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. 2017ம் ஆண்டில் மட்டும் 55 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26 பேர்,18 வயதுக்குக் குறைந்த சிறுமியர் 29 பேர். 2017ம் ஆண்டில் மட்டும் 49 சம்பவங்களில் 56 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் 2017ம் ஆண்டில் 1,273 சம்பவங்களில் 1,472 தலித்துகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலித் மக்களுக்கு எதிராக ஆயிரத்துக்கும் அதிகமான தாக்குதல்கள் நடைபெறும் 10 மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. அருகாமையில் உள்ள கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை விட தலித்களுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2016ம் ஆண்டு 1,291 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அது 2017ல் 1,362 ஆக அதிகரித்துள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையும் போக்ஸோ சட்டத்தையும் தமிழ்நாட்டில் சரிவர நடைமுறைப் படுத்துவதில்லை. மாவட்ட அளவிலான விழிப்பு கண்காணிப்புக் குழுவின் கூட்டங்களை நடத்துவதில் மாவட்ட ஆட்சியர்கள் அக்கறை காட்டுவதில்லை.
போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரை அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீராய்வு செய்யவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை எந்த மாவட்டத்திலும் செய்ததாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால்தான் சிறுமிகளுக்கு எதிராகவும் தலித்துகளுக்கு எதிராகவும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
என்.சி.ஆர்.பி அறிக்கை பா.ஜ.க - அ.தி.மு.க ஆட்சியில் தலித்துகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதற்குப் பொறுப்பேற்று மத்திய மாநில அரசுகள் விளக்கமளிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!