Politics

“தி.மு.க வேட்பாளருக்கு பழங்குடி இருளர் சங்கம் ஆதரவு” - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு!

பழங்குடி மக்கள் மீது தமிழ்நாடு முழுவதும் பொய் வழக்குகள் புனைவது காவல்துறைக்கு வாடிக்கையாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரிப்பது என பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் முடிவு செய்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டில் பழங்குடி இன மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் விழுப்புரம் ஒன்றாகும். இங்கு பழங்குடி இருளர் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குள் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 6,000 வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்களது வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லை. அதனால் நிரந்தர வீடற்றவர்களாக அவர்கள் அவதிப்படுகின்றனர். அவர்களது பிள்ளைகள் கல்வி பெறுவதற்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவதால் அவர்களது கல்வி பெருமளவில் தடைபடுகிறது.

இந்நிலையில் அண்மைக் காலமாக அ.தி.மு.க அரசின் காவல்துறை பழங்குடி இருளர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு துன்புறுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 இருளர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் பொய் வழக்குகளைப் புனைந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்திவருகிறது.

நியாயமான இந்த கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரிக்கிறோம். கைதுசெய்யப்பட்ட இருளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இருளர்கள் மீது மட்டுமின்றி பொதுவாகவே பழங்குடி மக்கள் மீது தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு பொய் வழக்குகள் புனைவது காவல்துறைக்கு வாடிக்கையாக உள்ளது.

பழங்குடி மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகளைப் பரிசீலித்து அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கும் தமிழக அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கும் விசாரணை ஆணையம் ஒன்றைத் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.