Politics
“தமிழக அரசியலின் மிகச்சிறந்த காமெடியன் ராஜேந்திரபாலாஜி” - கே.எஸ்.அழகிரி கண்டனம்!
அ.தி.மு.க-வினரின் தவறான தகவல் பரப்புரைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
“நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாக்கப்பட்டு வருகிற நிலையில், அதி.மு.க. அமைச்சர்கள் உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை நாள்தோறும் பரப்பி வருகிறார்கள்.
நாங்குநேரி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் ஒருங்கிணைந்த கடுமையான உழைப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பெருந்தலைவர் காமராஜரின் உடலை சென்னை கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் கோரியதை அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் மறுத்துவிட்டதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை கூறியிக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக மறுக்கிறேன், கண்டிக்கிறேன்.
பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது, அவரை எங்கே அடக்கம் செய்வது என்கிற நிலை ஏற்பட்டபோது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்யலாம் என யோசனை தெரிவித்தனர். ஆனால், அன்றைய தமிழக முதல்வர் கலைஞர், பெருந்தலைவர் காமராஜர் மறைவிற்கு தமிழக அரசின் சார்பாக ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்ததோடு, அவரது பூத உடலை சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்தார்.
அதோடு, அவரை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்வதை விட அனைத்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தலைவர் காமராஜருக்கு கிண்டி காந்தி மண்டபத்திற்கு அடுத்துள்ள இடத்தை தேர்வு செய்து அங்கே இறுதிச் சடங்கு செய்யலாம் என்று முதல்வர் கலைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அத்துடன் இரவோடு, இரவாக கிண்டி ராஜ்பவனுக்கு அருகில் உள்ள புதர்கள் மிகுந்த அப்பகுதி காங்கிரஸ் தலைவர்களான ராஜாராம் நாயுடு, திண்டிவனம் ராமமூர்த்தி, நெடுமாறன் ஆகியோரின் ஒப்புதலோடு அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து அன்றைய காங்கிரஸ் தலைவரான நெடுமாறன் ஒரு பேட்டியில் இதுகுறித்து தெளிவுபடக் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், சென்னைக் கடற்கரை சாலையில் பெருந்தலைவர் காமராஜரை அடக்கம் செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் எவரும் கோரவில்லை என்பதையும் உறுதிபடக் கூறியிருக்கிறார்.
உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களை ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். சமீபகாலமாக ஒரு மனநோயாளியைப் போல ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகள் அமைந்திருக்கின்றன. தமிழக அரசியலில் ஒரு மிகச் சிறந்த காமெடியனாக, அரசியல் கோமாளியாக ராஜேந்திர பாலாஜி பேசி வருகிறார். இதனால், தற்காலிகமாக பரபரப்பு அரசியலுக்கு ஊடக வெளிச்சம் அவருக்கு கிடைக்கலாம். ஆனால், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அ.தி.மு.க.வினர் எவருக்கும் தகுதியில்லை.
பெருந்தலைவர் காமராஜர் மறைந்தவுடன் சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் சூட்டி, கன்னியாகுமரியில் மணிமண்டபம் அமைத்த மறுநாளே நெல்லையில் சிலை அமைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சென்னை கிண்டியில் ரூபாய் 6 லட்சம் செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு நினைவகம் அமைத்தவரும் அவரே.
பெருந்தலைவர் காமராஜர் நினைவை தமிழக மாணவ - மாணவியர்கள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும் அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டுமென்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் அன்றைய முதல்வர் கலைஞர். அதற்கு அரசு நிதியுதவியாக ஆண்டுக்கு ரூபாய் 1 கோடியே 31 லட்சம் ஒதுக்கியவரும் கலைஞர் தான். 2008 முதல் அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அதற்கான நிதி மறுக்கப்பட்டு கல்வி வளர்ச்சி நாளும் கொண்டாடப்படுவதில்லை. இதன்மூலம் பெருந்தலைவர் காமராஜரின் புகழ் மாணவ - மாணவியர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்கிற அரசியல் உள்நோக்கத்தோடு இருட்டடிப்பு செய்து, புறக்கணித்து வருவது அ.தி.மு.க ஆட்சியாளர்கள், பெருந்தலைவர் காமராஜருக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும்.
எனவே, தோல்வி பயத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் பெருந்தலைவர் காமராஜரின் பெயரை பயன்படுத்தி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைப்பது வெறும் பகல் கனவாகத் தான் முடியும். இனியும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மலிவான அரசியலுக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை பயன்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!