Politics
“கடைக்கோடி வன்னியன் கூட ராமதாஸை நம்பத் தயாராக இல்லை” - பொன் குமார் பரபரப்பு பேட்டி!
நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் விவசாயிகள் தொழிலாளர் கட்சி, தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பணியாற்றும் என அதன் தலைவர் பொன்.குமார் அறிவித்துள்ளார்.
இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.குமார், “நேற்றைய தினம், வன்னியர் சமூகத்திற்கான பல்வேறு திட்டங்களை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். குறிப்பாக, 20% இட ஒதுக்கீடு கோரி போராடிய சமூக நீதி தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இந்த அறிவிப்பால் இரண்டரைக் கோடி வன்னியர்களும் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதேபோல கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற மிகப்பெரிய அறிவிப்பினையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
இது வன்னியர்கள் மத்தியில் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்திய காரணத்தால், பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்றைக்கு அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கான கட்சி இல்லை என்று அறிவித்தபிறகு இவர்கள் வன்னியர்கள் பெயரில் அறிக்கை விடுவது எந்த அடிப்படையில் என்பது தெரியவேண்டும்.
டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறையைக் கொடுத்தவர் தலைவர் கலைஞர். மத்தியில் தொடர்ந்து அமைச்சராக இருந்து இதுவரையில் வன்னியர்களுக்கு நீங்கள் செய்த சாதனை என்ன?
சாலை மறியல் போராட்டத்தில் 21 பேரை குருவியைச் சுடுவதுபோல் அ.தி.மு.க அரசு சுட்டு வீழ்த்தியது. 40,000 பேருக்கு மேல் வன்னியர்கள் மீது வழக்குகளைப் போட்டு அலைக்கழித்தது. மத்திய அரசில் அங்கம் வகித்த நீங்கள் அவர்களின் குடும்பத்திற்கு என்ன செய்திருக்கிறீர்கள்?
தார்மீக அடிப்படையில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அறிக்கை விடுவதற்கான, எந்த அடிப்படைத் தகுதியும் உங்களுக்கு இல்லை. வன்னியர்களை விட்டு விலகி தொலைவுக்குச் சென்றுவிட்டீர்கள். அவர்களுக்கான எல்லா நன்மைகளும் தலைவர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்று இருக்கிறது.
இனிமேல் வன்னியர்களுக்கு எந்த நன்மை நடந்தாலும் அது தி.மு.க ஆட்சியில்தான் நடைபெறும். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ராமதாஸ், அரசியலுக்காக வேண்டுமானால் விமர்சிக்கலாம். ஆனால், கடைக்கோடி வன்னியன் கூட டாக்டர் ராமதாஸை நம்பத் தயாராக இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!