Politics

“அடுத்து இராமாயணம் மகாபாரதத்தையும் பாடத்திட்டத்தில் கொண்டு வருவார்கள்” - திருமாவளவன் கடும் கண்டனம்!

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, திருமாவளவன், “செப்டம்பர் 20 முதல் 24ம் தேதி வரை நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்பு அமைந்தது. அந்த மாநாட்டில் உலகம் முழுவதும் வேலை மற்றும் பாரம்பரியம் என்கிற அடிப்படையில் நிகழும் பாகுபாடுகள் குறித்து, இந்தியாவில் நிலவுகின்ற சாதிய பாகுபாடுகள் உள்ளிட்டவற்றை குறித்து, ஐ.நா பேரவையில் உலக நாடுகளும் பேசவேண்டும் விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடிய வகையில் அமைந்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “பகவத் கீதையை அண்ணா பல்கலைக்கழக பாடத்தில் இணைத்தது அவர்களின் நீண்டநாள் கனவுத் திட்டங்களில் ஒன்று. விரைவில் ராமாயணம் மகாபாரதம் போன்றவற்றையும் பாடத்திட்டத்தில் கொண்டு வருவார்கள். பா.ஜ.க விரும்பியவற்றை அ.தி.மு.க அரசு செய்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த பாடத்திட்டம். வேறு எந்த மாநிலத்திலும் இந்த முனைப்பு காட்டாத நிலையில், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது போன்றவற்றை தமிழ்நாட்டில் முதலில் செயல்படுத்துவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறதா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது” என்றார்.

மேலும், “கீழடி அகழ்வாய்வு என்பது தமிழர்களின் தொன்மை மற்றும் சாதியற்ற சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தனர் என்கிற உண்மையை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் தமிழ் மொழி உலகின் மூத்த மொழி என்பதையும் விட தமிழர்களின் நாகரிகம் பிற இடங்களின் நாகரிகத்தை விட தொன்மையானது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதற்கான ஆதாரங்களை தமிழகத்திலேயே ஒரு மையம் உருவாக்கி பாதுகாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

ரயில்வே தனியார்மயமாக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “தனியார் மயமாதலை எந்த விதத்திலும் நாம் ஏற்க இயலாது. இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு சதித்திட்டம் . இது மெல்ல மெல்ல சமூக நீதியை குலைக்கும் செயலாகும் .தனியார்மயமாதலை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுசேர்ந்த இணைந்து முறியடிக்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து, நீட் ஆள்மாறாட்டம் குறித்துப் பேசிய அவர், “இதுபோன்ற ஆள்மாறாட்ட செயலுக்கு சட்டபூர்வமான நடவடிக்கை தேவை; இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செயலாகும். இதனை அரசு முறையாக கவனிக்கவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை இத்தனை காலம் தள்ளி வைத்தது சட்டத்திற்கு எதிரானது; விரைந்து தேர்தலை நடத்தவேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.