Politics

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் : அருண் ஜெட்லி பற்றிப் பலரும் அறியாத தகவல்கள்..!

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் நிதியமைச்சராகப் பணியாற்றியவர் அருண் ஜெட்லி. அப்போதே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் புதிய அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என அருண் ஜெட்லி கூறியிருந்தார். முன்னதாக வாஜ்பாயி தலைமையிலான அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சட்ட அமைச்சராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியன்று, அருண் ஜெட்லிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவருடைய உடல்நிலை தேறி வந்தநிலையில் மீண்டும், சென்ற வாரம் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. இதனால், மருத்துவர்கள் இரவு பகல் பாராமல், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி இன்று பகல் 12.07 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. அருண் ஜெட்லியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலமான அருண் ஜெட்லி 1952 டிசம்பர் 28ம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் அருண் மகாராஜ் கிஷன் ஜெட்லி ஆகும். ஜெட்லி தனது பள்ளிக்கல்வியை டெல்லியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் பயின்றார். டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு சங்கீதா ஜெட்லி என்ற மனைவியும் சோனாலி ஜெட்லி என்ற மகளும் ,ரோஹன் ஜெட்லி என்ற மகனும் உள்ளனர்.

1987ல் தனது வழக்கறிஞர் பணியைத் துவங்கிய அருண் ஜெட்லி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகவும் இருந்தவர்.

1999 அக்டோபர் 13ல் வாஜ்பாய் தலைமையிலான அரசில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.அதன் பின்னர் 2000ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மாநிலங்களவைக்கு குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் வாஜ்பாயி அமைச்சரவையில் 2002ல் சட்ட அமைச்சராக பதவி வகித்தார். அதேபோல வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இருமுறை மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அருண் ஜெட்லி, முன்முறையாக 2014ல் மக்களைவைத் தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், மாநிலங்களைவைக்கு தேர்வு செய்யப்பட்டு, மோடி அரசில் கேபினட் பதவி வழங்கப்பட்டது.

2018ல் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019ல் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அருண் ஜெட்லி அறிவித்ததை அடுத்து ரயில்வே துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மேலும் உடல்நலக்குறைவால் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பேட்டியிடாத ஜெட்லி, புதிதாக அமைந்த அமைச்சரவையில் எந்தப் பொறுப்பையும் வகிக்க விரும்பவில்லை எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், தொண்டர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.