Politics
“இது வாழ்வா, சாவா போராட்டம்; கடைசிவரை எதிர்த்துப் போராடுவோம்” : சேலம் உருக்காலையை விற்க மக்கள் எதிர்ப்பு!
சேலம் உருக்காலை சேலத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பெருமை சேர்த்தது. இந்த ஆலையை தமிழகத்தில் அமைக்க 1975ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஒப்புக்கொண்டார். பல தலைவர்கள் போராடிப் பெற்றதுதான் சேலம் இரும்பு உருக்காலை.
சேலம் ரயில் நிலையத்தில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேலம் உருக்காலை, இரும்பு மற்றும் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் உள்பட உலகத் தரத்திலான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலையாகச் செயல்பட்டு வருகிறது.
இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த சேலம் உருக்காலை மத்திய பா.ஜ.க அரசின் சரியான ஒத்துழைப்பின்மையால் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி, கடந்த 5 ஆண்டுகளாக சேலம் இரும்பாலை உள்பட சில ஆலைகளை தனியாருக்கு கொடுத்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு ஆலையிலும் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜூலை முதல் வாரத்தில் செயில் நிறுவனம், தனது கட்டுப்பாட்டில் உள்ள சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க உலகளாவிய டெண்டர் கோரி அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து, சேலம் உருக்காலை தனியார்மயம் செய்யப்படுவதைக் கண்டித்து தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல கட்டப் போராட்டங்கள் நடத்தினர். தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேலம் உருக்காலை தனியார் மயமாவதற்கு எதிராக கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்ய டெண்டர் வெளியிட்டதை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் 16வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் உருக்காலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஆலை அமைக்க 4000 ஏக்கர் நிலங்களை உளப்பூர்வமாக வழங்கிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள் மரக்கன்றுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாவது, “இந்த ஆலையில் 950 நிரந்தர தொழிலாளர்களும், 850 தற்காலிக தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறோம். சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த ஆலை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தனியாரிடம் விற்க மத்திய அரசு முயல்கிறது.
இந்த நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் நியாயமான முறையில் விற்கப்பட்டு வந்த இரும்பு அதிக விலைக்கு விற்கப்படும். மேலும் பணி நியமனத்திலும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
அதுமட்டுமின்றி இந்த இரும்பாலையின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 15 ஆயிரம் கோடி. ஆனால். இதை வெறும் 4 ஆயிரம் கோடிக்கு விற்க முடிவெடுத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? இதன் மூலம் பா.ஜ.க அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தனது விசுவாத்தைக் காட்ட முயற்சிக்கிறது எனத் தெரிகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக ஆலையை தனியாருக்கு விற்பதற்கு எதிராகப் போராடி வருகிறோம். இது எங்களின் வாழ்வா, சாவா போராட்டம். எனவே கடைசி தருவாயிலும் எதிர்காலத்தினருக்கும் சேர்த்துப் போராடுவோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!