Politics

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்; பதவி கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் - மீண்டும் சிக்கல்

கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் கவிழ்ந்தது. இதனையடுத்து, எடியூரப்பா ஜூலை மாதம் 26ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது அமைச்சர்களாக யாரும் பதவியேற்கவில்லை.

முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம், கர்நாடகாவில் வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்தது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் வாஜூபாய் வாலா 17 பேருக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்களாக பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷட்டர், ஈஸ்வரப்பா, சிடி ரவி, ஸ்ரீராமுலு, பசவராஜ் ஆகியோர் பதவியேற்றனர். அமைச்சர்களாக பதவியேற்ற 17 பேரில் 16 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷ் ஆவார்.

பதவி வழங்கியதில், கர்நாடக மாநில பா.ஜ.க-வின் சீனியர்களுக்கு சில முரண்பாடு இருந்துள்ளது. சிலர் சீனயர் என்ற முறையில் அமைச்சர் பதவி எதிர்பார்த்துள்ளனர். அப்படி கொடுக்கப்படாதவர்கள்,பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளனர்.

சித்ரதுர்கா தொகுதியில் இருந்து பா.ஜ.க சார்பில் முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திப்பா ரெட்டிக்கு இம்முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் பெங்களூர் காந்தி சர்க்கிள் பகுதியில் போராட்டம் நடத்தினர்.

அமைச்சரவையில் பதவி வழங்கப்படாததால் திப்பா ரெட்டி வருத்தமடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மூத்தவர்கள் மற்றும் விசுவாசிகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றார். மேலும், ”இதுபோன்று ஒத்த கருத்துடைய எம்.எல்.ஏக்கள் பெங்களூருவில் கூட்டத்தை நடத்தி, எங்கள் குறைகளை முதல்வர் மற்றும் மேலிடத்திற்கு தெரிவிப்போம் என தெரிவித்தார்.” இதேபோன்று அப்பாச்சு ரஞ்சன், ரேணுகாச்சார்யா போன்ற மூத்த பா.ஜ.க தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் கர்நாடக அரசியல், சந்தித்த மாற்றங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. குமாரசாமியிடம் இருந்து ஆட்சியை பிடிக்க, எடியூரப்பா பயன்படுத்திய துருப்புச் சீட்டும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தான். இப்போது பதவி கொடுக்கப்படாததால், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பது, உடனடியாக இல்லாவிட்டாலும், கூடிய விரைவில் பூதாகரமாகும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி நிகழ்ந்தால் கர்நாடகா மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பையும், ஆட்சி மாற்றத்தையும், நம்பிக்கை துரோகங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.