Politics

“அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான்” : ஜெ.தீபா அறிவிப்பால் கலங்கிய லட்சோப லட்சம் தொண்டர்கள்?!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்க்கச் சென்ற அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர் பத்திரிகையாளர்களிடம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிட்டார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அ.தி.மு.க-வுக்கு அழைக்கப்படாத தீபா, ஒரு நன்னாளில் ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என தன் பெயரையும் கட்சிப் பெயரில் இணைத்து புதிய கட்சியைத் துவக்கினார்.

தீபா கட்சியில் ஆளே இல்லை எனப் பேச்சு அடிபட, கோஷ்டிப் பூசலே இருக்கிறது எனத் தெரிவிக்கும் விதமாக, ஜெ.தீபா, மாதவன் உள்ளிட்டோர் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து மாதவன், ‘எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம்’ எனத் தனிக்கட்சி துவங்கி, அதைக் கலைத்துவிட்டு மீண்டும் தாய்க்கழகமான மனைவியின் கட்சியில் இணைந்ததெல்லாம் கிளைக் கதைகள்.

இந்நிலையில், சமீபத்தில் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஜெ.தீபா, “யாரும் என்னை தொந்தரவு செய்யவேண்டாம். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்துவதை இதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்தார்.

பின்னர் அந்த ஃபேஸ்புக் பதிவையும் நீக்கினார். இதனால், அவரது லட்சோப லட்சம் தொண்டர்களும், தங்கள் தலைவியின் தற்போதைய நிலைப்பாடு என்ன எனத் தெரியாமல் குழப்பத்தில் தவித்துவந்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.தீபா, தான் அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா மறைவுக்குப் பின், அலைகடலெனத் தொண்டர்கள் திரண்டு வந்தனர். பல சோதனைகளை தாண்டி இயக்கத்தை நடத்தி வந்தேன்.

உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன். அ.தி.மு.க-வுடன் இணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என கனத்த மனதோடு தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க-வுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், இதுவேறு என நொந்துகொள்கின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள். தீபாவின் அறிவிப்பைக் கேட்ட பொதுமக்கள்தான் அழுவதா சிரிப்பதா என்கிற குழப்ப மனநிலையில் இருக்கின்றனர்.