Politics
“இந்தியா ஒரே நாடு தான்; ஆனால் பன்முகத் தன்மையே அதன் அடையாளம்” - பெண்ணுக்கு கன்னையா குமார் தந்த பதிலடி !
பா.ஜ.க தன்னுடைய ஆட்சியில் ஒரே நாடு, ஒரே ரேசன், ஒரே கல்வி என தேசத்தை ஒற்றைக் காலச்சாரத்துடன் அடக்க முயற்சி எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக தேசியக் குழுவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும், கன்னயா குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது நடந்த விவாதத்தில் பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு கன்னயா குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாணவி கன்னயா குமாரிடம் எழுப்பிய கேள்வியில், “ இந்தியா ஒரே நாடு. இங்கு எல்லாமே ஒன்றுதான். இதை ஏன் உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை? எனக்கு ஒரு அப்பா ஒரு அம்மா தான். ‘நீங்கள் பாரத் மாதா கி ஜே’ சொல்வதற்கு, ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்.” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கன்னயா, “நீங்கள் ஒரே நாடு, ஒரே இனம் என்று சொல்லிவிட்டு வேறு எதையோ உதாரணமாக சொல்கிறீர்கள். பின்பு அதனை ஏன் ஆதரிக்கவில்லை என கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல இங்கு எல்லாம் ஒரே ஒரு நம்பரில் முடிந்து விடாது. இந்தியா ஒரு தேசம் தான் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இந்த தேசத்தை வழிநடத்தும் அரசியல் அமைப்பு சட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விதிகள் உள்ளன. ஏன் நாடாளுமன்றம் ஒன்று இருந்தாலும் அதில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகள் உள்ளன. அந்த இரு அவைகளுக்கும் ஒருவர் மட்டும் பிரதிநிதியாக தேர்வு செய்யப்படவில்லை. 545 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு சபைக்கு செல்கிறார்கள். நீங்கள் ஒன்று என்று சொல்வதனை நமது ஒருமைப்பாடு என்றுதான் நான் பார்க்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை பெற்ற நாடு இந்தியா. அதுதான் நமது பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
ஏன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று மட்டும் சொல்ல சொல்கிறீர்கள், ராமர் தனி ஆளா? இல்லையே அவர் சீதையுடன் தானே இருக்கிறார். அப்படியென்றால் ‘ஜெய் சீதா ராம்’ என்று தானே சொல்லவேண்டும். ஏன் அவ்வாறாக சொல்ல உங்களுக்கு தோன்றவில்லை. அதுமட்டுமின்றி நீங்கள் தாராளமாக ‘ஜெய் ஸ்ரீராம்’என்று சொல்லலாம், அதற்கான முழு சுதந்திரத்தையும் நமது அரசியலைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. அதனால் அவ்வப்போது ‘ஜெய் அரசியலமைப்பு சட்டம்’ எனவும் சொல்லுங்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் சொந்த கிராமத்தில் வித்தியசமான முறையில் பல பண்பாட்டை மக்கள் கடைபிடிக்கிறார்கள். கடவுள் என நீங்கள் சொல்லும் ராமனை அங்கு கேலி செய்து வழிபடுவார்கள். அதுதான் எங்கள் பாரம்பரியம், அது எங்கள் பண்பாட்டின் ஓர் அங்கம். அதனால் நீங்கள் எங்களை குற்றம் சொல்ல முடியுமா? எங்கள் பண்பாட்டின் கீழ் கடவுள்களை தனித்தனியாக பிரித்து வைத்து பார்க்கமுடியாது. எங்கள் பகுதியில் இருக்கும் ராமர் எப்போதும் சீதையுடன் தான் இருப்பார். நீங்கள் இளைஞர், பட்டப் படிப்பு படிப்பீர்கள் என நம்புகிறேன், அப்படி படித்தால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் ராமாயணம் குறித்து ஆராய்ச்சி செய்யுங்கள். இங்கு ராமாயணத்திற்கு 300-க்கும் மேற்பட்டக்கதைகள் உள்ளன.
இங்கு ஒரே கோவிலில் இரண்டு கடவுள்களை இரண்டு கடவுள் நம்பிக்கையாளர்கள் வணங்குவதை பார்க்க முடியும். இதுபோன்ற சிறப்புகளை இந்தியாவில் மட்டுமே காணமுடியும். லாஹோலி மொழி பேசும் மக்கள் சீதையின் தந்தை ராவணன் என கூறுவார்கள். இப்படியாக இருக்கும் போது நீங்கள் ஒன்று என நினைக்கும் பல விசயம் பல வடிவங்களில் உள்ளது. இது நமக்கான பெருமை. நீங்கள் இந்த நாட்டை குறுக்கும் நெடுக்குமாக சுற்றி பாருங்கள். உங்களால் கற்பனையில் கூட நம்ப முடியாத பல விசயங்கள் உள்ளதைக் காணமுடியும். அப்போது இந்த நாட்டின் முன்பு நீங்கள் சிறு துரும்பு தான் என உணர்வீர்கள். உங்களை இவ்வாறாக பேச யார் உங்கள் மூளையை சலவை செய்தார்கள் என தெரியவில்லை.
இங்கு பல பண்பாடுகள், கலாச்சாரம் இருப்பதனை நினைக்கும் போது இந்த நாட்டில் பிறந்த எவருக்கும் இதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் ஒன்று இருக்க முடியாது. மீண்டும், மீண்டும் உங்களிடம் ஒன்றை அறிவுறுத்த நினைக்கிறேன். இது உங்களுடைய நாடு தான். உங்களது அம்மா எப்படி உங்களுக்கு சொந்தமோ,அதே போன்று இந்த நாடும் உங்களுக்கு சொந்தம். இது ஒரு இயல்பான விசயம்.
நீங்கள் சாலையில் நடந்துக்கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு கும்பல் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கமோ அல்லது ‘ஜெய் ஸ்ரீராம்’முழக்கமோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் திடீரென உங்களிடம் வந்து “நீ உன் அம்மாவை நேசிக்கிறாய் என்றால், அதை நிரூபித்துக் காட்டு” என மிரட்டினால் என்ன செய்வீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும், பதில் எதுவும் உங்களால் சொல்லமுடியுமா? அது போன்றுதான் இங்கு எல்லோரும்.
இந்த தேசத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் நமது நாட்டை நேசிக்கிறார்கள். நாம் நேசத்தை விளம்பரப்படுத்திக் கண்காட்சிகள் மூலம் வெளிபடுத்த முடியாது. அது மனதில் தோன்றும் பெருமைக்குரிய உணர்வு. அப்படிதான் எங்கள் நேசங்களை நாட்டின் மீது வைத்துள்ளோம். அந்த நேசத்தை எங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு வாழ்கிறோம்”.
இவ்வாறு கன்னயா குமார் பேசி முடித்ததும், கரகோஷத்தால் அரங்கம் அதிர்ந்தது. சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!