Politics
பெங்காலிகளுக்கும் தமிழர்களுக்கும் சுயமரியாதை அதிகம் - கலைஞர் சிலை திறப்பு விழாவில் அதிரடி காட்டிய மம்தா
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞரின் சிலை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, வைரமுத்து, ஜெ. அன்பழகன், முரசொலி செல்வம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ''தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கலைஞர். மண்ணின் மைந்தனாகத் திகழ்ந்தவர் கலைஞர்.
அவரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொண்டு சிலையை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் பெருமைப்படுகிறேன். அன்பு சகோதரர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் அவரது பெயருக்கு ஏற்றபடி அநீதிக்கு எதிராக போராடுகிறார்.
கலைஞர் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டவர் கலைஞர். ஏழை எளிய மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், சிறுபான்மையினருக்காகவும் பாடுபட்ட மாமனிதராக வாழ்ந்தவர் கலைஞர். அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காகப் போராடியவர் கலைஞர்.
என்னுடைய நாடு இந்தியாவாக இருந்தாலும் நான் பிறந்தது வங்க நாட்டில். இதேபோல் ஸ்டாலின் அவர்களும் இந்தியாவில் இருந்தாலும், அவர் பிறந்தது தமிழ்நாட்டில். அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. ஒரு உரிமை இருக்கிறது. அந்த உரிமைக்காக நாம் போராடுவோம்.
தமிழக மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் மாநில உரிமையை விட்டுக் கொடுக்காத மக்கள். இதைப் போன்று தொடர்ந்து நாம் நம் மாநில உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும். தலைவர் கலைஞர் அவர்களும் மாநில உரிமைகளை தாரைவார்த்துக் கொடுக்காமல் போராடியவர். அதேபோன்று இளைஞர்களாகிய நீங்களும் மாநில உரிமைகளையும், நம்முடைய அடையாளத்தையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் வலிமையுடன் எதிர் கொள்ளவேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய காஷ்மீர் தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்துள்ளது பா.ஜ.க அரசு. அவர்கள் தமிழகத்திலும் இப்படி செய்ய நினைப்பார்கள்.நாம் அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.
மேற்கு வங்கத்திற்கும் தமிழகத்திற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. இரண்டு மாநிலத்திலும் ஒன்றாகத் தேர்தல் நடக்க போகிறது. நாம் ஒன்றாக வெல்ல வேண்டும். நமது வெற்றியை மக்களுக்கு நாம் பரிசளிக்க வேண்டும். ஜெய் பெங்கால்.. ஜெய் தமிழ்நாடு.. ஜெய் திராவிடம்'' இவ்வாறு தெரிவித்தார்
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !