Politics
“வழக்குகளின் மூலம் அச்சுறுத்த நினைக்கிறது அ.தி.மு.க” : மு.க.ஸ்டாலின் மீதான வழக்குக்கு முத்தரசன் கண்டனம்!
வேலூர் மக்களவை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக ஜூலை 1ம் தேதி வேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகளுடனும் முக்கிய பிரமுகர்களுடனும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அலோசனை நடத்தினார்.
அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், ஆலோசனைக் கூட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை எனக் காரணம் கூறி மண்டபத்தை இழுத்து மூடி சீல் வைத்தனர். அதன் பின்னர் கூட்டம் நடத்திய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த, மண்டபத்தின் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. தி.மு.க-வின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபடுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்,
அதில் அவர் கூறியிருப்பதாவது, “வேலூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றியை உறுதிப்படுத்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகின்றார். வேலூர் தொகுதி மக்கள் மக்கள் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில், தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் மட்டுமின்றி பொது மக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
இதனை சகித்துக் கொள்ள இயலாத ஆளும் அ.தி.மு.க., தனக்குள்ள ஆட்சி அதிகாரத்தை அதிகாரிகள் மூலம் தவறாக பயன்படுத்தி, வழக்குகளின் மூலம் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இஸ்லாமிய பெருமக்களை திருமண மண்டபத்தில் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்ற காரணத்திற்காக, மண்டபத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.
மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த், தோல் தொழிற்சாலை உரிமையாளர் பரிதாபாபு, ஜமாத் நிர்வாகி ஜக்ரியா ஆகிய நால்வர் மீதும் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையை மிக வன்மையாக கண்டிப்பதுடன் மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டதால் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கும் இடர் ஏற்படும். ஆதலால் சீல் அகற்றப்பட்டு மண்டபத்தை திறப்பதுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?