Politics

மோடி அரசு பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கே ஆர்வம் செலுத்துகிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியை தீவிரமாக செய்து வருகிறது. குறிப்பாக ரயில்வே துறை, விமான நிலையம் என தொடங்கி தமிழகத்தில் உள்ள சேலம் இரும்பாலை வரை தனியார்மயமாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. மேலும் கடந்த மாதம் சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க உலகளாவிய டெண்டர் கோரி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு தொழிலாளர்கள், எதிர்க்கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரும்பாலையை தனியார் மயமாக்க மத்திய பா.ஜ.க அரசு டெண்டரை கோரியுள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூலை 29ம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரிர் பேசியதாவது, “இந்தியாவில் உள்ள இரும்பாலைகளில் சேலம் இரும்பாலையில் மட்டும் தான், ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ உற்பத்தி செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் செலுத்துகிறது.

அதுமட்டுமின்றி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நெய்வேலி என்.எல்.சி-யின் 10 சதவீத பங்கை தனியாருக்கு கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர், கூட்டணியில் அங்கம் வகித்திருந்தபோதும், தனியாருக்கு 10 சதவீத பங்கை மத்திய அரசு கொடுத்தால், நான் தலைமையேற்று போராட்டம் நடத்துவேன் என கூறினார். உடனே அந்த முடிவு நிறுத்தப்பட்டது. அரசே ஆலையை இயக்க ஆரம்பித்தது.

ஆனால், அத்தகைய சூழல் தற்போது இல்லை. இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவினை எதிர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வரவேண்டும். சேலத்தை சொந்த ஊராக கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நான் தலைமையேற்று போராட்டம் நடத்துவேன் என்று கூறி மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நிற்க வேண்டும்”. என அவர் கூறினார்.