Politics

“13 பேய்களின் நம்பர்” - தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க அமைச்சரின் ‘அடடே’ பேச்சு!

வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க வெற்றிபெறுவதைத் தடுக்க மத்திய - மாநில அரசுகளின் சதியால் அரங்கேற்றப்பட்டது தேர்தல் நிறுத்திவைப்பு நடவடிக்கை. இந்நிலையில், அங்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்களும், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, கே.வி.குப்பத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அவர் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜாதகப் பொருத்தம் கிடையாது. 8 பொருத்தமும் எங்கள் அண்ணன் எடப்பாடியாருக்குத்தான் இருக்கிறது. எடப்பாடியார் கண் அசைத்தால் போதும். தி.மு.க அவ்வளவுதான்.” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க 13 இடங்களிலும் அ.தி.மு.க 9 இடங்களிலும் வென்றது. இதில் 13 என்பது பேய்களின் நம்பர். 9 என்பது நவரத்தினங்களின் எண்ணிக்கை.நாங்கள் நவரத்தினங்களைப் பெற்றிருக்கிறோம்” எனப் பேசினார்.

இடைத்தேர்தலில் குறைவான தொகுதிகளில் வென்றதோடு அல்லாமல், சம்பந்தம் இல்லாமல் அ.தி.மு.க அமைச்சர்கள் உளறிக்கொண்டிருக்கிறார்களே என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.