Politics

“அதுவரை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்..” : கர்நாடக அரசியல் குறித்து ராகுல், பிரியங்கா கருத்து!

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற ஆளும் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணிக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. அவருக்கு ஆதரவாக 99 வாக்குகளும், அவருக்கு எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

குமாரசாமி அளித்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலா ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ள பா.ஜ.க, எடியூரப்பாவை மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கவைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பேராசை வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்தின், நேர்மையின், கர்நாடக மக்களின் தோல்வி” எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக அரசியல் நிலை குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கமுடியாது என்கிற உண்மையை பா.ஜ.க ஒருநாள் உணரும். அவர்களின் அனைத்து பொய்களும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். அதுவரை இந்நாட்டின் குடிமக்கள் கட்டுப்பாடற்ற ஊழலையும், ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், அரசின் அமைப்புகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் சகித்துகொள்ள வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.