Politics

தமிழக ஆளுநர் எடப்பாடியை மதிக்காமல் போட்டி சர்கார் நடத்தி வருகிறார் - வைகோ குற்றச்சாட்டு

எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும், எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும் நாடகம் ஆடி வருகிறார்கள் என்றும், அரசை மதிக்காமல் போட்டி ஆளுநர் போட்டி சர்கார் நடத்தி வருகிறார் என்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை தாயகத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மாநாடு நடத்த உள்ளது. அதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி மற்றும் மலேசிய நாட்டின் அமைச்சர் ராமசாமி என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

அத்தி வரதர் கோயிலுக்கு லட்சக்கக்கானோர் வருவார்கள் என்று தெரிந்தும் இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அத்திவரதரை காண சென்ற 9 பேர் இறந்து உள்ளனர். அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தான் இறந்து இருக்கிறார்கள். அத்திவரதரை தரிசிக்க தமிழக அரசு போதிய வசதிகள் செய்து தரவில்லை.

மேலும், ஸ்டெர்லைட், மீத்தேன், கூடங்குளம் அணுவுலை போன்ற அடுக்கடுக்கான கொடுமைகளை தமிழக மக்கள் மீது இந்த அரசாங்கம் திணித்து கொண்டிருக்கிறது. தமிழகம் எல்லா வகையிலும் இந்த அரசால் சிரமத்தை சந்தித்து வருகிறது. நீட் மசோதா விவகாரத்தில் மாநில அரசு துரோகம் இழைத்துள்ளது.

எழுவர் பேர் விடுதலையில் ஆளுநரும் , மாநில அரசும் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆளுநர் ஒரு போட்டி சர்கார் நடத்தி கொண்டு இருக்கிறார். அமைச்சரவையும், ஆளுநரும் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து வருகின்றனர்.

வேலூர் மக்களவை தேர்தலில் கதிர்அனந்த் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் கூலிப்படை போல் செயல்ப்பட்டது. இந்தியும் , சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்'' இவ்வாறு தெரிவித்தார்