Politics

முதல்வராக இருந்தபோது கழுதை மேய்த்துக் கொண்டிருந்தாரா சந்திரபாபு நாயுடு ? : எல்லை மீறிய ஜெகனின் பேச்சு !

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைத் தோற்கடித்து மிகப்பெரிய பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றினார்.

முதல்வர் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து, மாநில மக்கள் மட்டுமில்லாது மற்ற மாநில மக்களும் வியக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு உருவாகியுள்ளது.

அதேநேரம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் சீண்டாமல் இல்லை. அவர் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்தும், நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. இதனால், இரு கட்சியினரிடையே சிறு சிறு உரசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சபை கூடிய தினம் முதல் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடைபெற்று வருகிறது. சட்டமன்றம் என்பதை மறந்து இரு தரப்பும் எந்தவித யோசனைகளும் இன்றி முறையற்ற வார்த்தை பிரயோகம் செய்வதால் அசாதாரண சூழல் நிலவுகிறது.

அப்படி ஒரு வாக்குவாதத்தில், முதல்வர் ஜெகன் மோகன், “சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது கழுதை மேய்த்தாரா? ” என்று கேட்க சட்டமன்றமே கொந்தளித்தது.

மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீடு விஷயத்தில் ஆளும் கட்சி என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியது தெலுங்கு தேசம் கட்சி தரப்பு. இதற்கு பதிலளித்த போது தான் விவாதம் திசை மாறியது.

சமீபத்தில், தெலங்கானா மாநிலத்தில் காளீஷ்வரம் நீர் பாசன திட்டம் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டம் கொண்டு மாநிலம் முழுவதுக்குமான விவசாயம் மற்றும் நீர் தேவையை தீர்க்க முடியும். இந்த மெகா திட்டத்துக்கு 80,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதால் ஆந்திராவுக்கு கிடைக்கும் நீர் அளவு குறைவதாகவும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன் இணக்கமாக இருக்கும் ஜெகன் மோகன் இதற்கு ஏன் ஆதரவு தருகிறார் என்றும் கேள்வி எழுப்பினார் சந்திரபாபு.

இதற்கு பதிலளித்த ஜெகன் மோகன் ரெட்டி“ காளீஷ்வரம் திட்டத்தை தெலங்கானா அரசு தொடங்கிய போது, முதலமைச்சராக இருந்தது நீங்கள், அப்போது அதைத் தடுக்காமல் சந்திரபாபு நாயுடு என்ன கழுதை மேய்த்துக் கொண்டிருந்தாரா?” என கேட்கவே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எதிர்ப்பு தெரிவித்து பேசிய சந்திரபாபு நாயுடு “ உங்கள் வயது என் அனுபவம். தொடர்ந்து அவமரியாதையாக பேசுவது சரியல்ல” என்றார். இதையடுத்து கடும் அமளி ஏற்பட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.