Politics
கர்நாடக அரசியலில் ஒரு பாகுபலி : தனி ஒருவனாக ஆட்சியைக் காப்பாற்ற போராடும் டி.கே சிவக்குமார்
கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்கு 105 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 10 பேர், மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். கட்சி தலைமை எவ்வளவோ சமாதானம் கூறியும், ராஜினாமா அவர்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
பா.ஜ.க ஆயிரக் கோடி ரூபாய் ப்ராஜெக்ட் போட்டு கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் சதியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சந்தித்து சமாதானம் செய்வதற்காக, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று மும்பை சென்றார். எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஒரு அறை முன்பதிவு செய்திருப்பதாகவும், எம்.எல்.ஏ-க்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
டி.கே.சிவக்குமார் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன்பு, ஜேடிஎஸ் தலைவர் நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாரசாமி மற்றும் சிவக்குமார் வருவதால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், டி.கே.சிவக்குமாரை ஹோட்டலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.
டி.கே.சிவக்குமார் முன்பதிவு செய்திருந்த அறையை ஹோட்டல் நிர்வாகம் ரத்து செய்தது. ஆனால், எம்.எல்.ஏ-க்களை சந்திக்காமல் ஹோட்டலை விட்டு வெளியே செல்லமாட்டேன் என்று கூறிய சிவக்குமார், ஹோட்டல் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிவக்குமார் மற்றும் காங்கிரஸாரை போலீசார் கைது செய்தனர். ஹோட்டலை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் சூழ்ச்சியாலும், பணபலத்தாலும் கர்நாடக அரசு ஆட்டம்கண்டிருக்கும் நிலையில் தனியொரு நபராக நின்று காங்கிரஸ் சார்பாக, ஆட்சியைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார் டி.கே.சிவக்குமார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!