Politics

வேலூர் தேர்தலில் போட்டியிடாததற்கு தினகரன் சொன்ன ‘எகிடுதகிடு’ காரணம்: உண்மை என்ன ?

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அதற்கு அவர் நிலையான சின்னம் இல்லாததைக் காரணமாகக் கூறினாலும் உண்மையான காரணம் கட்சிக்குள் நிலவிவரும் குழப்பம் தான்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போடியிடாததற்கு தினகரன் கூறிய காரணம் என்னவென்றால், “வேலூர் மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடுவது சிக்கலாக உள்ளது.

ஆகவே, கட்சியைப் பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்தவுடன் தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் வெற்றிபெறலாம் என நினைத்துவந்தார் தினகரன். ஆனால், கடும் தோல்வியைச் சந்தித்ததுடன், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளோடு மட்டுமே போட்டி போடும் நிலை உருவானது.

மேலும், அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகியாக இருந்த தங்க.தமிழ்செல்வன் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சமீபத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

முன்னாள் அமைச்சரான இசக்கி சுப்பையாவும் அ.ம.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் தஞ்சமடைந்தார். மேலும், பல நிர்வாகிகளும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை வழங்கி அவர்களை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் தினகரன்.

இதற்கிடையே வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் நின்றாலும், மூன்றாவது - நான்காவது இடங்களுக்கே போட்டிபோட முடியும் என தினகரன் உணர்ந்துள்ளார். பணம் செலவு செய்து படுதோல்வி அடைவதை விட போட்டியிடாமலேயே ஒதுங்கிக்கொள்ளலாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.