Politics

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட பங்கேற்காத எடப்பாடி : மேலிட உத்தரவால் பம்முகிறாரா?

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு, 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு கூறியபடி முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்தால் சமூக நீதிக்கு பங்கம் விளையும் என எச்சரித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தவும் வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின். எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்று இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அரசின் அழைப்பை ஏற்று தி.மு.க சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ம.தி.மு.க சார்பில் மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், வி.சி.க சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பா.ஜ.க தலைவர் தமிழிசை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட பங்கேற்றுள்ளனர்.

சமூக நீதியை உறுதிசெய்வதற்காக நடைபெறும் இந்த முக்கியமான கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக பா.ஜ.க செயல்படுத்தியிருக்கும் இந்த இட ஒதுக்கீட்டு முறையை அதன் அதிகாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க-வின் முதல்வர் ஆதரிக்க நினைக்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு நிராகரித்ததைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வம் இன்றைய சட்டப்பேரவையில் மறுத்தார். மத்திய அரசிற்கு ஒத்து ஊதும் மாநில அ.தி.மு.க அரசு பா.ஜ.க-வின் சமூக நீதியைக் கொல்லும் முயற்சிகளுக்கும் துணைபோவது பொதுமக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.