Politics
“பெண் குரலுக்கு மாற்றப்பட்ட வாய்ச்சவடால் பட்ஜெட்” : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடல்!
நாட்டின் 17-வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க இரண்டாம் ஆட்சி காலத்தை தொடங்கியுள்ளது. மோடியின் பா.ஜ.க அரசின் பெண் நிதியமைச்சர் 2019, -20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று (05.07.2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நவ தாராளமயக் கொள்கையினால் உருவாகி வரும் ஏற்றத்தாழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திசை வழியில் நிதிநிலை அறிக்கை அமையவில்லை. நாட்டின் ஒட்டு மொத்த சொத்துக்களில் 77.40 சதவீதம் 10 சதவீதத்தினரிடம் குவிந்துள்ளது. அடுத்த 60 சதவீதத்தினரிடம் வெறும் 04.07 சொத்துக்களே இருக்கின்றன. அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு போக்கு சமூக அமைதிக்கு உதவாது என்பதை நிதியமைச்சர் கருத்தில் கொள்ளவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.5 முதல் 4 சதவீதம் வரை உள்ள நிலையில் நிதிநிலை அறிக்கை 7 சதவீத வளர்ச்சி இருப்பதாக் கூறுவது சரியல்ல என பொருளாதார ஆலோசகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் வேளாண்மை தொழிலின் நெருக்கடிக்கு தீர்வுகாண நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தவில்லை. நாட்டின் உணவு தானிய உற்பத்தியை தன்னிறைவு நிலைக்கு உயர்த்திய விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உற்பத்தி செலவுடன், கூடுதலாக 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற வேளாண் விஞ்ஞானி
எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை பரிசீலிக்கபடவில்லை. விவசாயிகள் தற்கொலை சாவுகளுக்கு முக்கிய காரணமான ‘கடன் சுமை’யை நீக்க முன்வரவில்லை. வேளாண்மைத்துறையில் தனியார் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று கூறி குழும நிறுவனப் பண்ணைகள் அமைப்பதை நிதிநிலை அறிக்கை அனுமதிக்கிறது.
‘அல்வா’ தயாரித்து நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட நிதியமைச்சரிடம் தொழில் மற்றும் தொழிலாளர் துறைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னுரிமை கடமைகளை மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு தெரிவித்தன. இதனை நிராகரித்து விட்ட நிதியமைச்சர், பல்வேறு வகையில் பயனளிக்கும் தொழிலாளர் சட்டங்களை நீக்கி விட்டு, வெறும் 4 நெறிக்கோடுகளாக மாற்றுவதில் உறுதி காட்டுகிறது. இதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துக் கொண்டு, அவர்களை மூலதனத்தின் அடிமைகளாக்க முயற்சிக்கிறது.
நாட்டின் பொருளாதார கட்டமைப்பின் அரணாக விளங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிதிநிலை அறிக்கை அனுமதிக்கிறது.
ஒரு நாடு, ஒரு தேர்தல்; ஒரே நாடு, ஒரு கல்வி; ஒரே நாடு, ஒரு மின்சாரம் ;ஒரே நாடு, ஒரு ரேஷன்; ஒரே நாடு, ஒரு கலாச்சாரம் என்ற அணுகுமுறையை தீவிரமாக அமலாக்கி, மாநில உரிமைகளை பறிக்கும் செயலுக்கு நிதிநிலை அறிக்கை பச்சைக் கொடி காட்டுகிறது.
தொன்மை தமிழ் இலக்கிய படைப்பான ‘புறநானூற்றை’ தனது வாதத்திற்கு பயன்படுத்திக் கொண்ட நிதி அமைச்சர் தமிழ்நாட்டில் நிலவி வரும் குடிநீர் பஞ்சம், நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் ரயில்வே வசதி திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தோ, உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைளோ நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை.
நிதிநிலை அறிக்கையில் பா.ஜ.க மத்திய அரசு இதுவரை ஆண் குரலில் செய்து வந்த வாய்ச்சவடால் இப்போது பெண் குரலுக்கு மாற்றப்பட்டிருப்பது தவிர மக்களுக்கு பயனளிக்கும் புதிய திட்டம் எதுவும் இல்லை. இது வாக்களித்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தெரிவித்துக் கொள்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!