Politics

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு !

முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தலைமையிலான இரு அணிகள் உருவாகின. முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டனர்.

பின்னர், இருதரப்பினர்களுக்கு இடையே நட்பு உறவு ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பன்னீர்செல்வம் உள்பட 11 பேரும் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், முதலமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்காததற்கு எதிராக தி.மு.க சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், சபாநாயகர் உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதி ஏ.கே.சிக்ரி விசாரித்து வந்தார். அவரது ஓய்வுக்கு பின்னர் இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என தி.மு.க வழக்கறிஞர் கபில்சிபில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி சிக்ரி ஓய்வு பெற்றதால், புதிய அமர்வை விரைவில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வும் உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.