Politics

மக்களவையில் விட்டதை உள்ளாட்சியில் பிடித்த கேரள மார்க்சிஸ்ட் கட்சி - 22 இடங்களில் வெற்றி!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் ஆளும் அரசாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி 20ல் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு சபரிமலை விவகாரத்தை மாநில அரசு கையாண்டதே காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று (ஜூன் 21) கேரளாவில் 33 கிராம பஞ்சாயத்துகளுக்கும், 6 ஒன்றிய பஞ்சாயத்துகளுக்கும் 5 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 44 இடங்களில், இடதுசாரிகளுடன் கூட்டணியில் உள்ள ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மக்களவை தேர்தலில் தோல்வியுற்றதற்கு சபரிமலை விவகாரம் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், சபரிமலை அமைந்திருக்கும் பத்தனம்திட்டா பகுதியிலும் இடதுசாரிகள் கூட்டணியே வெற்றியடைந்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் போன்று, தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் பா.ஜ.கவால் தனது வெற்றியை பதிவு செய்ய முடியாத நிலையே நீடித்து வருகிறது. அவ்வகையில் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே பா.ஜ.க வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.