Politics

பார்லிமெண்ட் வெற்று ஹீரோயிஸம் தமிழக மக்களுக்குத் தண்ணீர் வாங்கித் தராது மிஸ்டர் ஓ.பி.ஆர் !

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. நாள்தோறும் மக்கள் தண்ணீருக்காக பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்தும், இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளாத அ.தி.மு.க அரசு குறித்தும் மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசினார். அப்போது, தமிழக மக்களுக்கு நீராதாரமாக விளங்கும் அனைத்து நதிகளும் வறண்டுவிட்டதாகவும், சென்னையின் நீராதாரமாக 4 ஏரிகளும் வறண்டுவிட்டது.

அதேபோல் சென்னையில் உள்ள ஏரிகளில் கடந்த ஆண்டு மே மாதம் இறுதி வரை 2,094 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மே 29ம் தேதி நிலவரப்படி 76 மில்லியன் கனஅடி நீரே இருந்தது என குறிப்பிட்டார்.

பாலைவனம் போல் காட்சியளிக்கும் நீர் நிலைகளால் தமிழக மக்களுக்கான தண்ணீருக்கு தற்போது வேறெந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்து, உடனடியாக ரயில் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

இதனையடுத்து பேசிய அ.தி.மு.க எம்.பி ஓ.பி ரவீந்திரநாத், பருவமழை பொய்த்ததால் நீராதாரங்கள் வறண்டுவிட்டது. இதுதான் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம். இதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற தொனியிலேயே அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

மேலும் பேசிய ரவீந்திரநாத், தண்ணீர் பிரச்னைக்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க அரசு எடுத்து வருகிறது என்று சொல்ல, மற்ற மாநில எம்.பி.,க்கள் ஓ.பி ரவீந்திரநாத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் அவரது உரை பாதியில் நிறுத்தப்பட்டது.

அ.தி.முக. அரசு வறட்சி ஏற்படும் என முன்பே அறிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் வெறும் யாகமும், பிரார்த்தனையுமே நடத்தி வருவதுதான் அவர்களின் போர்க்கால நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இது குறித்து அண்மையில் குடிநீர் பிரச்னைக்காக தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின், தண்ணீர் பிரச்னைக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் ஏன் வீதிக்கு வந்து காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட போகிறார்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.