Politics
“எந்தக் காலத்திலும் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்” : திருமாவளவன் எம்.பி பேட்டி!
தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சென்னை அசோக் நகர் கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலும் கலந்துகொண்டார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன், “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. தலைவர் கலைஞர் மறைந்தபின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது. தலைவர் இல்லாத வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்” என்றார்.
அதேபோல் பா.ஜ.க-வை வீழ்த்தும் அளவிற்கு தி.மு.க சிறப்பாக இந்தத் தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்டது என்றார். தி.மு.க கூட்டணி அகில இந்திய கவனத்தைப் பெற்றதோடு, ஒட்டுமொத்த தேசமும் திரும்பி பார்க்கும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், “பள்ளிக் கல்விக் கொள்கையில் ஒரு வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இது அமைச்சரின் கவனத்திற்கு செல்லாமல் வந்திருக்காது. தமிழகத்தின் தனித்துவத்தை பாதுகாக்கும் முயற்சியில் மக்கள் உள்ளதால் தான் தமிழகத்தில் பா.ஜ.க வெற்றிபெற முடியவில்லை. இந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழிப்போர் உள்ளிட்டவை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறாமல் இருந்திருந்தால் தற்போது நாம் அனைவரும் இந்திவாலாவாக மாறியிருப்போம். மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே இது நடைபெறாமல் இருந்தது.
இது வெறும் இந்தி திணிப்பு மட்டுமல்ல கலாச்சார திணிப்பு முயற்சி. எனவே எந்தக் காலத்திலும் இந்தி திணிப்பை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருந்து பல திட்டங்களை தமிழகத்திற்குக் கொண்டு வருவதை விட, உண்மையான எதிர்க்கட்சியாக இருந்து இந்திய ஜனநாயகத்தை காப்போம். வாயில்லாத ஊமையாக இருந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட மாட்டோம். நாட்டு மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும்" இவ்வாறு கூறினார்.
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பேசுகையில், “தமிழகத்தின் எதிர்காலம் தி.மு.க தலைவர் கையில் உள்ளது. தான் ஒரு ராஜதந்திரி என்பதை தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் நிரூபித்துள்ளார். தமிழக மக்கள் உறுதியாக நின்று இந்த கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளார்கள். இந்த வெற்றி உலகத்தையே தமிழகத்தை நோக்கித் திருப்பியது.
திருமாவளவனின் வெற்றி மிக முக்கியமானது. மக்கள் நலனுக்கான அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களின் உரிமைகளைக் காக்க குரல் கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.
மேலும் காஷ்மீர் பிரச்சனை பற்றிய விவாதத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்’ என்று பாடிய உறுப்பினரை போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் கிண்டலாகத் தெரிவித்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.
தருமபுரி எம்.பி. செந்தில்குமார் பேசியதாவது, “வாக்குகளை வேறு யாருக்கும் சிதறாமல் தி.மு.க-விற்கு வழங்கிய வாக்காளர்கள், நான் வெற்றிபெற வேண்டும் என பிரசாரம் செய்த கூட்டணிக் கட்சியினர் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன். கழகத் தலைவர் ஸ்டாலினை ஆட்சியில் அமர வைக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தருமபுரி தேர்தல் முடிவு என்பது தி.மு.கவிற்கு கிடைத்த வெற்றி - பா.ம.க.விற்கு கிடைத்த பதிலடி” என்றார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்