Politics

ராகுல் காங்கிரஸ் தலைவராகத் தொடரக்கோரி நடந்த பேரணியில் தீக்குளித்த தமிழகத் தொண்டர் !

மக்களவை தேர்தல் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி முடிவெடுத்தார். இதை காங்கிரஸ் கட்சியினர் ஒத்துக் கொள்ளவில்லை. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக தொடர வேண்டி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் பவன் அருகிலிருந்து துவங்கி காமராஜர் அரங்கம் வாயில் வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் தமிழக காங்கிரஸ் கட்சி மேற்பார்வையாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் ஸ்ரீவல்லா பிரசாத், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே ஆர் ராமசாமி, திரு குமரிஅனந்தன், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி. தங்கபாலு மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமை தொடர வேண்டும் என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். காமராஜர் அரங்க வாயிலில், ஒரு காங்கிரஸ் தொண்டர் உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். பின்பு பேரணியில் கலந்து கொண்டவர்கள் தீக்குளிக்க முயன்ற அவரை காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேரணி முடிந்தபின் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , "ராகுல் காந்தி மட்டுமே இந்த கட்சியை நடத்த முடியும் .வேறு எந்த தலைவரையும் திணிக்கக் கூடாது என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியால் மட்டுமே தொடர்ந்து நடத்த முடியும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். அவரே தலைமை ஏற்று நடத்த வேண்டும் என இந்த மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்து தமிழக காங்கிரஸ் சார்பாக நடத்தியுள்ளோம். எங்கள் கூட்டணி கட்சி சார்பில் அனைத்து தலைவர்களும் ராகுல் காந்தியே தலைமையேற்று தொடர்ந்து நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.