Politics

எடப்பாடி பழனிச்சாமியின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டு இருக்கின்றது - வைகோ பேட்டி!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் (மே 23) வெளியானது. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான தி.மு.க தலைவர் முக.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்

"நியூட்ரினோ மேகதாது அணை ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இருக்கும்.

திராவிட கோட்டைக்குள் பி.ஜே.பி.யால் நுழைய முடியவில்லை. ஆளும் கட்சிகளின் அறைகூவலுக்கு எதிராக தி.மு.க கூட்டணியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர். தி.மு.க கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆளும் கட்சிகளுக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. மேலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அடுத்த முதலவராக வருவார் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்."இவ்வாறு கூறினார்.