Politics

தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராகும் நவீன் பட்நாயக் !

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பிஜு ஜனதா தளம் 104 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

ஆட்சியமைக்க 74 இடங்கள் இருந்தால் போதுமானது என்ற நிலையில் பிஜு ஜனதா தளம் 104 இடங்களில் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து 5வது முறையாக ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார். அதேபோல் மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 14-ல் பிஜூ ஜனதா தளம் முன்னிலை வகித்து வருகிறது.

1997-ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பிஜூ ஜனதா தளத்தை உருவாக்கினார் நவீன் பட்நாயக். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் 2000ம் ஆண்டு ஒடிசாவின் முதல்வரானார்.

2000ம் ஆண்டு முதல் நடைபெற்ற நான்கு சட்டசபை தேர்தல்களிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்து வந்தது. தற்போதைய தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கிறது.