Politics

பாஜக மீண்டும் ஆட்சியமைத்தாலும், 15 நாட்களில் ஆட்சி கவிழும்- சரத்பவார் பேச்சு!

நாடுமுழுவதும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ம் தேதி அன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் காங்கிரஸ் கமிட்டியின் மூத்தத் தலைவர் சரத்பவார். அப்போது பேசிய அவர், “மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, ஒருவேளை பா.ஜ.க வெற்றி பெற்றால் அந்த கட்சியை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுப்பார். அதனை ஏற்று பா.ஜ.க கட்சி ஆட்சியமைத்தாலும் கூட, 1996ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசுக்கு நேர்ந்தது போன்று மோடியாலும் ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது. 10-15 நாட்களுக்குள் பா.ஜ.கவின் அரசு கவிழ்ந்துவிடும் ” என தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, பா.ஜ.கவின் ஆட்சி மீண்டும் அமைவதில் மக்களுக்கு துளியளவும் விரும்பவில்லை என்றார். தேர்தலில் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் தாங்கள் வெற்றி பெறுவோம் என பா.ஜ.கவினர் மக்களை ஏமாற்றுவது மட்டுமில்லாமல் தங்களையும் ஏமாற்றிக்கொள்கின்றனர் எனவும் சரத்பவார் விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்டமன்றத்தேர்தலில் பாஜக எப்படி மண்ணை கவ்வியதோ அதேபோல், தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலிலும் தோல்வியையே சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.