Politics

எங்களை வம்புக்கு இழுக்கும் வேலையை ராமதாஸ் தொழிலாக கொண்டுள்ளார் : தொல்.திருமாவளவன் சாடல்!

பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல், சாதி வன்கொடுமைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில், பா.ம.க., இந்து முன்னணியும் சேர்ந்து திட்டமிட்டு நடத்தி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது; அரியலூர் அருகே பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் அன்று தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல், சாதி வன்கொடுமைகள் குறித்து பல்வேறு தரப்பினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அதுமட்டுமல்ல பேராசிரியர் லட்சுமணன், பேராசிரியர் கதிரவன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினரும் அந்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியும், இந்து முன்னணியும் சேர்ந்து பொன்பரப்பி வன்முறையை திட்டமிட்டு நடத்தி உள்ளனர் என்று உறுதிபடுத்தியுள்ளனர். தொடக்கத்தில் இருந்தே கலவரத்துக்கு யார் காரணம் என்பதை நாங்கள் கூறி வருகிறோம். இப்போது அது உண்மையாகியுள்ளது.

தேர்தலில் சிதம்பரம் தொகுதி முழுவதும் ஒட்டு மொத்தமாக வாக்குச்சாவடிகளை பா.ம.க.வினர் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். எந்த பகுதில் எதிர்ப்புகள் இல்லையோ அங்கு அவர்கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியுள்ளனர். மற்ற இடங்களில் அது பலிக்கவில்லை.

பொன்பரப்பியில் காலை 8 மணிக்கே ஓட்டு போட வந்த தலித் மக்களை மிரட்டியுள்ளனர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரம் உருவாக்குவதற்கு திட்டமிட்டு பானைகளை உடைத்துள்ளனர்.

இதை தட்டிக் கேட்ட குணசீலன் என்பவரை பா.ம.க. வினரும், இந்து முன்னணியினரும் தாக்கிய தோடு சேரிக்குள் புகுந்தும் பானை சின்னத்துக்கா ஓட்டு போட்டாய் என கேட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதைப்பற்றி தெரிந்துகொண்டே ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறுகளை அள்ளிவிசுகிறார்.

காவல்துறையும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இந்த நிலையில் திருமாவளவன் வருவதற்கு வாய்வழியாக உத்தரவிட்டுள்ளார்கள். போலீசார் ஒருதலைபட்சமாக செயல் படுவது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

என் படமும், டாக்டர் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்ட இரு சக்கர வண்டியில் சென்ற தலித் இளைஞர்களை வழி மறித்து பா.ம.க.வினர் தாக்கி உள்ளனர். வண்டியையும் உடைத்துள்ளனர். தட்டிக் கேட்டவர்களையும் அரிவாளால் வெட்டி உள்ளனர். ஆனால் தலித் தாக்கியதாக எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகின்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை எல்லா பிரச்சனைகளையும் தொடர்புபடுத்தி, வம்புக்கு இழுக்கும் வேலையை டாக்டர் ராமதாஸ் தொழிலாக கொண்டுள்ளார். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். என அவர் தெரிவித்தார்.