Politics
ஓ.பன்னீர் செல்வமும்.. அவரின் பா.ஜ.க விசுவாசமும் ! - ஒரு அலசல்
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சில தினங்களுக்கு முன் வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒரு ஊடகவியலாளர் அவரிடம் “நீங்கள் பா.ஜ.க.,வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகிறதே?” என்று கேள்விஎ ழுப்ப கடுங்கோபம் அடைந்த பன்னீர்செல்வம். ”அது முட்டாள் தனமான கேள்வி” என்றார். மீண்டும் அதே கேள்வியை எழுப்ப கடுங்கோபம் அடைந்த ஓ.பி.எஸ் தரப்பு நிருபரை உண்டு இல்லை என்றாக்கி விட்டார்கள்.
தமிழகத்தின் அரசியல் பரப்பிலும், இணைய வெளியிலும் , ஏன் அ.தி.மு.க தொண்டர்களிடமும் இன்னும் சந்தேகமான ஒரு கேள்வி உலவிக் கொண்டிருக்கிறது. அது ஓ.பி.எஸ் அ.தி.மு.க.,வில் இருக்கிறார். ஆனால், அவர் அ.தி.மு.க தலைவர்களுள் ஒருவரா அல்லது தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக அ.தி.மு.க.,வில் இருக்கிறாரா? என்பதுதான் அந்தக் கேள்வி. உண்மையில் இக்கேள்வி அல்லது சந்தேகம் எப்படி யாரால் உருவாக்கப்பட்டது. ஓ.பி.எஸ் மீது தொடரும் இந்த பா.ஜ.க நிழல் உருவாக யார் காரணம் என்ற கேள்விக்கு மீண்டும் ஒரு முறை நாம் ஜெயலலிதா மரணத்தையொட்டிய நிகழ்வுகளை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா மரணமடைவதற்கு முந்தைய ஓராண்டில் தமிழகம் கவரனரில்லா தமிழகமாக இருந்தது. பின்னர், பின்னர், தற்காலிக ஆளுநராக மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2016 செப்டம்பர் 2-ம் தேதி தமிழக கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற சில நாட்களில் ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தமிழக அமைச்சரவையை வழி நடத்திச் செல்வார். ஆனால், முதல்வராக ஜெயலலிதாவே நீடிப்பார் என அறிவித்தார் அப்போதைய தற்காலிக ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
2016 அக்டோபர் 5 முதல் அமைச்சரவையை வழிநடத்திச் சென்ற பன்னீர்செல்வம். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016 டிசம்பர் 6–ம் ஆதேதி நள்ளிரவு அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பன்னீர்செல்வம் தமிழக அமைச்சரவையை வழிநடத்திச் சென்றது முழுமையாக இரண்டு மாதங்கள்தான். அந்த இரண்டு மாதங்களில் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமானவை.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்ற போது தற்காலிக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் சுதந்திரமாக எந்த முடிவையும் எடுத்ததில்லை. ஆனால், ஜெயலலிதா சுயநினைவின்றி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது மூன்று முக்கியமான முடிவுகளை எடுத்தார். அது அத்தனையும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள். படுக்கையில் இருந்த முதல்வர் எதிர்த்த திட்டங்களை அமைச்சர் என்ற அந்தஸ்துடன் இருந்து அமைச்சரவையை வழிநடத்திச் சென்ற ஒருவர் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மாநில முதல்வர் எதிர்த்த திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டியது எப்படி?
சம்பவம் 1
அக்டோபர் 5-ம் தேதி அமைச்சரவையை வழி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அக்டோபர் 21-ம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து வந்த உதய் மின் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கினார். மத்திய மின்துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயலுக்கும் ஜெயலலிதாவுக்கும் இது தொடர்பாக மோதல் நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதே உதய் மின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது பன்னீர்செல்வம் தலைமையிலான ஜெயலலிதாவின் அமைச்சரவை.
சம்பவம் 2
பின்னர் நவம்பர் 1-ஆம் தேதி உணவுப்பாதுகாப்பு மசோதாவுக்கு பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்கினார். இதுவும் ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டம்தான். இந்த திட்டத்திலும் எந்த திருத்தமும் கொண்டு வராமல் ஒப்புதல் வழங்கியதால் தமிழகத்தின் ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயத்தை சந்திக்கிறது.
சம்பவம் 3
நவம்பர் 23-ம் தேதி ஜெயலலிதா எதிர்த்து வந்த நீட் தேர்வு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அரசாணை வெளியிட்டது.
சம்பவம் 4
இன்னும் பல திட்டங்கள் ரகசியமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 6ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தார். அவரை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கும் முடிவை எடுக்க வேண்டிய பன்னீர்செல்வம் ஏனோ எடுக்கவில்லை என்பதோடு, ஜெயலலிதா இறந்து விட்டார் என்ற செய்தி ஊடகங்களில் கசிய, அதை அப்பல்லோ நிர்வாகம் முதலில் மறுத்தது. பெரும் குழப்பம் நிலவிய போது அ.தி.மு.க.,வின் முக்கிய அமைச்சர்களோடு ரகசியமாக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பன்னீர்செல்வத்தை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தற்காலிக ஆளுநர் வித்யாசாகர் ராவ். பன்னீர்செல்வம் பதவியேற்ற பின்னர்தான் ஜெயலலிதாவின் மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பன்னீர்செல்வம் அமைச்சரவையை வழிநடத்தியது, பின்னர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டது போன்ற நிகழ்வுகளில் சசிகலா பங்கேற்கவில்லை. அவர் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. பிரபல ஊடகமான இந்தியாடுடே சென்னையில் நடத்திய நிகழ்வுக்கு முதல்வர் பன்னீர்செல்வமும், சசிகலாவும் அழைக்கப்பட்டார்கள். இருவருமே ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.
பின்னர், சசிகலா பொதுச்செயலாளர் ஆகி, முதல்வராகவும் ஆக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி குழுவினர் போயஸ்கார்டனுக்கு படையெடுத்தனர். பன்னீர்செல்வம் தன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். சிறை செல்லும் அவசரத்தில் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்தார் சசிகலா. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார்.
சசிகலா சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமியும் மோடியின் அடிமையாக மாறி தனி அணி ஆனார். மொத்தத்தில் அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என இன்றளவும் மூன்று அணிகளாக செயல்படுகிறார்கள்.
இதில் பன்னீர்செல்வம் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போதே பா.ஜ.க கட்டுப்பாட்டில் சென்றவர். ஜெயலலிதாவுக்கு உண்மையாக இல்லாமல் மோடிக்கு உண்மையாக இருந்தவர். எடப்பாடி முதல்வரான பின்னர் மிரட்டப்பட்டு மோடியின் ஆதரவாளராக மாறியவர். சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் அவரது தரப்பாக தினகரன் செயல்படுகிறார்.
இதில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், பா.ஜ.க மத்தியஸ்தத்தில் பன்னீசெல்வம் மறுபடியும் இவர்களுடன் இணைகிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்படுகிறது.
இதில் எந்த ஒரு தரப்புக்கும் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.,வுக்கு மக்கள் வாக்களிக்க அதை மூன்று தரப்பினர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அதில் சட்ட விரோதமாக அரசியல் சட்டத்திற்கு முரணாக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவும், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும், இப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் காப்பாற்றி வருகிறார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க கொடுத்த மனுவை கிடப்பில் போட்ட ஆளுநர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு உத்தரவிடாமல், தேவையற்ற தாமதத்தைச் செய்கிறார். ஆளுநரின் இந்த தாமதத்தை அடுத்து 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எடப்பாடி தப்புகிறார். இந்த அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யாத எடப்பாடி பழனிசாமி. இப்போது மேலும் சில உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பற்ற நினைக்கிறார்.
இந்தியாவில் வேறுஎந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை, சட்டவிரோதமாக ஆட்சிக்கு வந்த பன்னீர்செல்வத்தை முதல்வராக்கி பாதுகாத்த அதே பா.ஜ.க.,தான் இப்போது எடப்பாடி பழனிசாமையும் சட்டவிரோதமாக பாதுகாக்கிறது. கடந்த முறை ஆட்சியில் இருந்த தி.மு.க ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க அரசு என மூச்சுக்கு முந்நூறு தடவை விமர்சித்தவர் ஜெயலலலிதா. ஆனால், மைனாரிட்டியிலும் மைனாரிட்டி அரசாக இருக்கும் அ.தி.மு.க அரசு நாம் மேலும் மேலும் மைனாரிட்டி ஆகி விடக்கூடாது என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதன் மூலம் மைனாரிட்டி அரசை தக்க வைத்து வருகிறது.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் சில சக்தி வாய்ந்த நபர்களை சென்னைக்கு அனுப்பி நேரடியாக பன்னீர்செல்வத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தாங்கள் நினைத்தது அத்தனையும் செய்து கொண்டது பா.ஜ.க. அதை செய்து கொடுத்த ஒரு அமைச்சருக்கு இந்தியாவின் உயர் தர பதவியும் வழங்கப்பட்டதாக அப்போது பேச்சு அடிபட்டது. பன்னீர்செல்வம் இப்போது அ.தி.மு.க.,வில் இருக்கலாம். ஆனால், அவர் பா.ஜ.க.,வின் பிரமுகராகவே செயல்படுகிறார் என்பதே உண்மை.
சில தினங்களுக்கு முன் வந்த பத்திரிக்கை செய்திக்கு, மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். அதில் எத்தனை உண்மை இருக்கிறது ஓ.பி.எஸ்.க்கு தெரியும். அதைவிட, தமிழக மக்களுக்கு ஓ.பி.எஸ்.சின் உண்மையும், விசுவாசமும் தெரியும். அதுகூட புரியாத முட்டாள்களாக இங்கு யாரும் இல்லை என்பதை ஓ.பி.எஸ் மறந்துவிடக்கூடாது.
- அருள் எழிலன்
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு